17 வயது டிக்டாக் இன்ஃப்ளூயன்சர் சனா யூசஃப், தனது பிறந்த நாளையொட்டி வீடியோ வெளியிட்ட சில மணி நேரங்களில் இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் வெளியாகிய செய்திகளின்படி, இந்த துப்பாக்கிச் சூடு நேற்று இரவு இஸ்லாமாபாத்த்தில் உள்ள அவரது வீட்டில் நடந்துள்ளது.
டிக்டாக் இன்ஃப்ளூயன்சர் சனா யூசஃப்பை மர்ம நபர் சுட்டுக்கொலை செய்துவிட்டு மாயமாய் மறைந்துவிட்டதாகவும், அந்த நபர் சனாவின் பிறந்த நாள் விருந்தினராக கலந்து கொண்டிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
போலீசார் சனாவின் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. கொலையின் பின்னணி இன்னும் தெரியவில்லை.
சமூக வலைதளங்களில் சனாவின் மரணம் குறித்து பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குற்றவாளியை விரைவில் பிடித்து தகுந்த தண்டனை பெற்றுத்தர வேண்டும் என பலர் ஆவேசமாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
சனா யூசஃப், பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள சிட்ரால் பகுதியை சேர்ந்தவர். டிக்டாக்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த அவரது திடீர் மரணம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்புதான் பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் 15 வயது ஹிரா என்ற பெண், டிக்டாக் வீடியோக்கள் பதிவிட்டதற்காக, தந்தை மற்றும் மாமா ஆகியோரால் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
