பாகிஸ்தான் நாட்டில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அந்நாடு மிகப் பெரிய பணக்கார நாடாக மாற வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்தது என்பதும் அந்நாட்டின் கடன் சுமார் 126 பில்லியன் டாலர் இருப்பதாகவும் கூறப்பட்டது. அதிக பணவீக்கம், அந்நிய கையிருப்பு குறைவு, நிதி அழுத்தங்கள் காரணமாக பாகிஸ்தான் நாடு பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருவதாக உலக வங்கி கூறி இருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் வரலாற்றில் முக்கியமான இந்த கட்டத்தில் மிகப்பெரிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த எண்ணெய் வளத்தில் கச்சா எண்ணெய் மட்டுமின்றி எரிவாயு மற்றும் ஒரு சில மதிப்புமிக்க கனிம வளங்கள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இது உறுதியாகும் பட்சத்தில் பாகிஸ்தானின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் உயரும் என்றும் அரபு நாடுகளுக்கு இணையான பணக்கார நாடாக மாற வாய்ப்பு மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தற்போது கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துவரும் நிலையில் இனி ஏற்றுமதி ஆகும் அளவுக்கு முன்னேற வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் இந்த எண்ணெய் வளத்தை வெளியே எடுக்க நான்கு முதல் ஐந்து ஆண்டு காலம் ஆகும் என்றும் ஐந்து பில்லியன் டாலர்கள் வரை முதலீடு தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.