100 வீடியோ எடிட் செய்ய வெறும் ₹18,000.. தரைமட்டமாகி வரும் திறமைக்கான கூலி..கலைக்கு மரியாதை இல்லையா?

  கலைப்படைப்புகளுக்கு கிடைக்கும் நியாயமற்ற ஊதியம் ஒரு பெரிய பிரச்சினையாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரு வீடியோ எடிட்டர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டது, இந்தப் பிரச்சனையை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது. ஒரு…

editing.jp

 

கலைப்படைப்புகளுக்கு கிடைக்கும் நியாயமற்ற ஊதியம் ஒரு பெரிய பிரச்சினையாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒரு வீடியோ எடிட்டர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டது, இந்தப் பிரச்சனையை மீண்டும் விவாதத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஒரு வாடிக்கையாளர் 100 குறும்படங்களை உருவாக்க சொல்லி, அதற்கு வெறும் ₹18,000 மட்டுமே ஊதியமாக வழங்க முன்வந்துள்ளார். எடிட்டர் ₹25,000 கேட்டபோது, பட்ஜெட் இல்லை என்று கூறி, ₹20,000 மட்டுமே தர சம்மதித்துள்ளார். இதனால் கோபமடைந்த எடிட்டர், வீடியோ எடிட்டிங் என்பது வெறும் காட்சிகளை வெட்டி ஒட்டுவது மட்டுமல்ல; அதற்கு தனித்திறன், நேரம், படைப்பாற்றல் என பல அம்சங்கள் தேவைப்படும் என்பதை விளக்கினார்.

லிங்க்ட்இனில் அவர் வெளியிட்ட பதிவில் “வீடியோ எடிட்டிங்கிற்கு மிக குறைந்த ஊதியம் கொடுப்பதை நிறுத்துங்கள். இது கதை சொல்வது, உணர்வுகளை வெளிப்படுத்துவது, ஒலி வடிவமைப்பு என பல கலைகளை உள்ளடக்கியது. இதற்கு சில்லறைத்தனமாக கட்டணம் தருவது இந்த தொழிலையே அழித்துவிடும். தகுதியான எடிட்டர்கள் தங்கள் மதிப்பு புரியாமல் சோர்வடைந்து, இத்துறையை விட்டு வெளியேறுகிறார்கள். தரம் வேண்டுமானால், பணம் கொடுக்க தயாராக இருங்கள். ஆர்வத்தால் மட்டும் பில்களை செலுத்த முடியாது. இந்த கலைக்கு மதிப்பளியுங்கள்!” என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்தப் பதிவுக்கு பலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். “எடிட்டர்கள்தான் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த வாய்ப்புகளை பெற்று தருகிறார்கள்” என்றும், “குறைந்த பட்ஜெட் உள்ள ஸ்டார்ட்அப்கள் எடிட்டர்களை சுரண்டுவதில்லை” என்றும் வெவ்வேறு கருத்துகள் பதிவாகியுள்ளன. “அதனால்தான் ஃப்ரீலான்சர்கள் வெளிநாட்டு வாடிக்கையாளர்களை நாடுகிறார்கள்” என்றும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

ஒருவர், “ஒரு குறும்படத்திற்கு ₹1,000 என்பது பொதுவான கட்டணம், 100 வீடியோக்களுக்கு ₹60,000-₹70,000 கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். இதுபோல குறைந்த ஊதியம் பெறுவது மனச்சோர்வை ஏற்படுத்தும் என்றும், இது போன்ற வாடிக்கையாளர்களை தவிர்ப்பதே சிறந்த தீர்வு என்றும் பலர் தெரிவித்துள்ளனர்.

ஒரு எடிட்டர், எடிட்டிங் வகைக்கு ஏற்ப செலவுகளையும் விளக்கினார்: அடிப்படை எடிட் ₹500-₹800, நடுத்தர எடிட் ₹800-₹1,500, மேம்பட்ட எடிட் ₹1,500-₹3,000 என விலைகள் மாறுபடும் என்றார்.