ஒளிமயமான எதிர்காலம்.. தந்தை படுத்த படுக்கை.. தாய் கூலி வேலை.. டாக்டர் கனவுடன் தெருவிளக்கில் படிக்கும் 9 வயது சிறுமி.. நெட்டிசன்கள் நெகிழ்ச்சி..!

  பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த ஒரு சிறுமியின் வீடியோ இணையத்தில் பலரின் மனதை தொட்டுள்ளது. மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில், தனது நோட்டு புத்தகத்தில் குனிந்து, முழு கவனத்துடன் படிக்கும் அந்த சிறுமி, 4ஆம்…

sneha

 

பீகார் மாநிலம் கயாவை சேர்ந்த ஒரு சிறுமியின் வீடியோ இணையத்தில் பலரின் மனதை தொட்டுள்ளது. மங்கலான தெருவிளக்கு வெளிச்சத்தில், தனது நோட்டு புத்தகத்தில் குனிந்து, முழு கவனத்துடன் படிக்கும் அந்த சிறுமி, 4ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சினேகா குமாரி. அவரது வீட்டில் மின்சார வசதி இல்லை. ஆனால், அவளது கனவுகளோ, பலரையும் விட பிரகாசமாக ஜொலிக்கின்றன.

சினேகா, தனது பெற்றோர் மற்றும் நான்கு உடன்பிறப்புகளுடன் சோட்கி பேதியா கிராமத்தில் வாழ்கிறார். அவரது தந்தை மகேஷ் மஞ்சி, முன்பு தினக்கூலி வேலை செய்து வந்தவர். ஆனால், இப்போது அவர் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். குடும்பத்தினர் தங்களிடம் இருந்த ₹1.5 லட்சத்திற்கும் மேலான அனைத்து பணத்தையும் அவரது சிகிச்சைக்காக செலவழித்துவிட்டனர். இன்று, பணமில்லை, மின்சாரமில்லை, ஆதார் அட்டை இல்லை, ஆயுஷ்மான் பாரத் அட்டை இல்லை, ஏன், ஒரு வீட்டுக்கு தேவையான எந்தவித அத்தியாவசிய பொருட்களும் இல்லை.

இந்த நிலையில் உடல் நலிந்து, சோர்வுடன் காணப்பட்ட மகேஷ், தன்னை பார்க்க வந்த ஊடகவியலாரிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே முன்வைத்தார்: “என் மகள் வாழ்க்கையில் ஏதாவது ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். அது மட்டும்தான் என் ஒட்டுமொத்த விருப்பம்” என்றார்.

சுற்றியுள்ள இருள் சூழ்ந்த நிலையிலும், சினேகா ஒரு மருத்துவராக வேண்டும் என்று கனவு காண்கிறாட். ஒவ்வொரு இரவும், அவர் தெருமுனைக்கு சென்று, மங்கலான வெளிச்சத்தின் கீழ் அமர்ந்து தீவிர கவனத்துடன் படிக்கிறார். குடும்ப செலவுக்காக அவரது தாய், சினேகா வேலை செய்து வருகிறார். தன் மகள் மிகவும் புத்திசாலி என்றும், விடாமுயற்சியுடன் இருப்பவள் என்றும் பெருமையுடன் அந்த தாய் கூறுகிறார்.

ஆனால், வெறும் விடாமுயற்சியால் மட்டும் போதாது. சினேகாவுக்கு மின்சாரம் தேவை. அவருக்கு புத்தகங்கள், பாதுகாப்பான படிக்கும் இடம், மற்றும் தன் தந்தையை இழக்கும் பயம் இல்லாமல் வளர ஒரு வாய்ப்பு தேவை.

மகேஷ் பேசும்போது கண்ணீருடன் உடைந்துபோகிறார்: “என் சொந்த குடும்பம்கூட உதவ மறுக்கிறது. எனக்கு என எதுவும் வேண்டாம் என் மகளுக்கு மட்டும் உதவுங்கள்.”

அவர்களது கதை பல நெட்டிசன்கள் அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். இந்த வறுமையில் இருந்து மீள சினேகா ஒரு நல்ல மருத்துவராக வரவேண்டும், அதற்கு நாங்கள் உதவி செய்ய தயார் என பலர் முன்வந்துள்ளனர்.