மக்களை ஏமாற்றும் நோக்கத்தில், மோசடிக்காரர்கள் புதிய புதிய யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு பொதுவான யுக்தியாக “அப்பாவின் அல்லது அம்மாவின் நண்பர்” என கூறி செய்யும் மோசடி தொடர்ந்தும் பரவலாக நடந்து வருகிறது. இதில், மோசடிக்காரர்கள் நம்பிக்கைக்குரிய ஒருவராக நடித்து, நுண்ணறிவு தகவல்கள் அல்லது பணத்தை பறிக்க முயல்கின்றனர்.
இத்தகைய மோசடிகளை எதிர்த்து, சமீபத்தில் ஒரு இளம்பெண் தனது புத்திசாலித்தனத்தால் ஹீரோவாக மாறி, இணையதள மோசடிகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வைத்துள்ளார்.
X தளத்தில் பகிரப்பட்ட வீடியோவில், அந்த இளம்பெண்ணிடம் ஒருவர் அவரின் அப்பாவின் நண்பர் என கூறி, அப்பாவுக்கு UPI வழியாக பணம் அனுப்பவேண்டும் என தெரிவித்தார். ஆனால் அந்தப் பெண் உடனே இது ஒரு மோசடி என்பதை உணர்ந்து, அவருடன் ஒத்துழைக்கும் போல் நடித்து நேரத்தை இழுத்தார்.
அந்த மோசடிக்காரர், உன் தந்தை ₹12,000 பணம் அனுப்பச் சொன்னதாக கூறி, அனுப்பப் போவதாக தெரிவித்தார். பின்னர், ₹10,000 அனுப்பி விட்டதாக கூறி, ஒரு தனிப்பட்ட எண்ணிலிருந்து ( போலியான SMS ஒன்றை அனுப்பினார். அதன் பின்னர், மீண்டும் ₹2,000 அனுப்புவதாக கூறிய நிலையில், திடீரென தவறுதலாக ₹2,000க்கு பதிலாக ₹20,000 அனுப்பிவிட்டதாக கூறி, ₹18,000 திருப்பிக் கொடுக்குமாறு கேட்டார்.
அந்த புத்திசாலி இளம்பெண், அவர் அனுப்பிய போலி மெசேஜை எடிட் செய்து தான் ₹18,000 திருப்பி அனுப்பி விட்டதாக காட்டும் போலியான மெசேஜை உருவாக்கி, அதனை அவருக்கே அனுப்பிவிட்டு, “நானும் உங்களுக்கு ₹18,000 அனுப்பி விட்டேன்” என தைரியமாக பதிலளித்தார்.
அந்த பெண் தன்னுடைய மோசடியை புரிந்து கொண்டார் என்பதை அறிந்த அந்த மோசடிக்காரர், நீ சுதாரிச்சிட்டமா என கூறி, அழைப்பை துண்டித்துவிட்டார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, பலரும் அந்த இளம்பெண்ணின் தைரியத்தையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டி வருகின்றனர். சிலர் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளனர்.
https://x.com/gharkekalesh/status/1911410835118838014