ஒரே நாடு ஒரே தலைவர் போல, ஒரே நாடு ஒரே கணவர் என்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் மோடியை பிரபலப்படுத்தி வருகிறார்கள் என்றும், இந்திய பெண்கள் அனைவரும் அவரை கணவராக ஏற்றுக்கொள்வார்களா என்றும், ஆம் ஆத்மி எம்பி ஒருவர் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கைக்கு பிறகு, இந்தியாவில் உள்ள அனைத்து வீட்டிலும் பாஜகவினர் குங்குமம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.
இந்திய பெண்களை பொறுத்தவரை, குங்குமம் என்பது அவரது கணவரால் மட்டும் வழங்கப்படும் ஒரு விஷயம் என்றும், கணவரின் நீண்ட ஆயுளுக்கும் நலனுக்கும் நெற்றியில் வைக்கும் சின்னமாகும் என்றும், பெண்கள் அனைவரும் குங்குமத்தை கணவருக்கு கொடுக்கும் அடையாளமாக காண்கிறார்கள் என்றும், ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்பி சஞ்சய் சிங் அறிவித்துள்ளார்.
ஆனால் பாஜகவினர் அனைவரும் இந்தியாவில் உள்ள எல்லார் வீட்டிற்கும் சென்று குங்குமத்தை வழங்குவதை பார்க்கும் போது, ஒரே நாடு ஒரே கணவர் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவதாக அமைகிறது என்றும், சிந்தூர் என்பது பெண்களின் அடையாளம், அதை அரசியலுக்காக பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே கேரளாவில் காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடியை ஒரே நாடு ஒரே கணவர் என கேலியாக போஸ்டர் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போது ஆம் ஆத்மி எம்பி அதே போன்ற ஒரு கருத்தை தெரிவித்துள்ளதால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்துக்களின் மத சின்னமான சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பாஜக எப்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
