Asian News International (ANI) என்ற நியூஸ் ஏஜென்சி தங்களது காப்புரிமை பெற்ற சில விநாடி வீடியோக்களை பயன்படுத்தியதற்காக, லட்சக்கணக்கில் பணம் கேட்டு யூடியூபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளின் படி, ANI சில விநாடிகள் மட்டுமே உள்ள வீடியோவை பயன்படுத்தியதற்காக பல லட்சங்கள் கோரியுள்ளது.
YouTube உள்ளிட்ட தளங்களில் தொழில்நுட்பம், அரசியல், விளையாட்டு, விமர்சனம் போன்றவை குறித்த புதிய சேனல்கள் தினமும் தோன்றி கொண்டே உள்ளது.
4 மில்லியனுக்கு மேற்பட்ட சந்தாதாரர்கள் கொண்ட YouTuber Mohak Mangal, ANI ஊழியர் ஒருவரால் பணம் கேட்டு மிரட்டப்படுகிறேன் எனக் குற்றம்சாட்டிய முதல் நபராக இருந்தார். “நீங்கள் 50 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் உங்கள் சேனலை நீக்கிவிடுவோம் என்று ANI என்னை மிரட்டியது” என அவர் கூறினார்.
அவர் வெளியிட்ட வீடியோவில், ஒரு ஆடியோ பதிவு இருந்தது. அதில் ANI ஊழியர் ஒருவர், “நீங்கள் அனுமதியின்றி எங்களது வீடியோ காட்சியை உங்கள் யூடியூப் சேனலில் பயன்படுத்தினீர்கள், நான் YouTube-இல் காப்புரிமை குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளேன். நீங்கள் தொடர விரும்பினால் தொடருங்கள். ஆனால் உங்கள் சேனல் போய்விடும்,” என மிரட்டியதாக தெரிவித்தார்.
Mohak Mangal மேலும் இதுகுறித்து கூறியதாவது, ANI-யின் முதல் காப்புரிமை குற்றச்சாட்டு, அவரின் 16 நிமிட வீடியோவில் 11 விநாடிகள் உள்ள ANI கிளிப்பை பயன்படுத்தியதற்கு ஆகும். இரண்டாவது குற்றச்சாட்டு, 38 நிமிட Operation Sindoor வீடியோவில் 9 விநாடிகள் பயன்படுத்தியதற்காக கூறப்பட்டுள்ளது.
3.5 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்ட மற்றொரு YouTuber Rajat Pawar, ANI தனது சேனலுக்காக ₹18 லட்சம் கேட்டதாக கூறினார். ஏற்கனவே இரு காப்புரிமை குற்றச்சாட்டுகள் வந்துள்ளதையும், மூன்றாவது வரக்கூடும் எனவும் கூறினார்.
அவர் ANI-யை அணுகி, அனைத்து வீடியோ கிளிப்புகளையும் நீக்குவதாகவும், இனி பயன்படுத்தமாட்டேன் எனவும் வாக்குறுதி அளித்ததாகவும் கூறினார். ஆனால் ANI, தங்களது சந்தாவை பெறவேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என தெரிவித்தார்.
Ashish Solanki, Physics by Pankaj Sir உள்ளிட்ட பிரபல YouTubers, இந்த விவகாரத்தில் தங்களது சக யூடியூபர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
7 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்ட YouTuber Nitish Rajput, “பல்வேறு ஆண்டுகள் உழைத்த பிறகு, YouTubers தங்கள் சேனலை இழக்க நேரிடக்கூடாது. YouTube உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.
Labour Law Advisor, தனிப்பட்ட நிதி மேலாண்மை குறித்து வீடியோக்கள் வெளியிடும் YouTuber, “இத்தகைய முறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர பெரிய துணிச்சல் தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.
நகைச்சுவையாளர் Kunal Kamra கூறியதாவது, “YouTube India பொறுப்பேற்க வேண்டும். ANI-யை, உள்ளடக்கம் உருவாக்குநர்களை மிரட்டியதற்காக தளத்திலிருந்து தடை செய்ய வேண்டும்.”
ANI இதுவரை அதிகாரபூர்வமாக பதிலளிக்கவில்லை. ஆனால் அதன் தலைமை ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷ, மற்றொரு YouTuber-ஐ பற்றிய copyright strikes குறித்து அதிரடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் Copyright Strike என்றால் என்ன? என்பதை பார்ப்போம். காப்புரிமை என்பது, ஒரு சிந்தனையின் உரிமையைத் தானே வைத்திருக்கும் நபருக்கே உரியது. பிறர் அதைப் பயன்படுத்த முடியாது. YouTube தளத்தில் இத்தகைய காப்புரிமையை பாதுகாக்க பல விதிமுறைகள் உள்ளன.
YouTube விதிமுறைபடி “உரிமையுள்ளவர்கள் தாங்களே உருவாக்கிய வீடியோக்களையே பதிவேற்ற வேண்டும். பிறர் உரிமை பெற்ற இசை, வீடியோ, நிகழ்ச்சி பகுதிகள் ஆகியவற்றை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது.”
Fair Use என்ற கருத்து, சிறிய பகுதிகள் கருத்தாக்க நோக்கில் பயன்படுத்தலாம் என்றாலும், அது பகுதி சட்டங்களுக்கேற்ப தான் இருக்கவேண்டும்.
விமர்சனம் செய்யும் சிறிய YouTube சேனல்கள், பெரும் ஊடகங்களின் காணொளிகளை தவிர்க்க முடியாத சூழலில் பயன்படுத்துகிறார்கள்.
YouTube, ஒரு காப்புரிமை மீறல் கண்டறியும்போது முதலில் எச்சரிக்கை அளிக்கிறது. 90 நாட்களில் மூன்று மீறலாகுமாயின், Copyright Strike வழங்கப்படுகிறது.
முதல் Strike – 7 நாட்களுக்கு வீடியோ பதிவேற்றத் தடை
இரண்டாவது Strike – 2 வாரங்களுக்கு தடை
மூன்றாவது Strike – சேனல் நிரந்தரமாக நீக்கப்படும்
இது எந்த ஒரு YouTuber-னுடைய வளர்ச்சித் திட்டத்திற்கும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
இந்த சர்ச்சையையடுத்து, Press Trust of India (PTI), ஒரு அறிவிப்பை வெளியிட்டு, YouTubers-க்கு தங்களது வீடியோ உள்ளடக்கம் மிகவும் குறைந்த விலைக்கு வழங்க தயார் என்று தெரிவித்துள்ளது.
அவர்கள் கூறியதாவது:
“நாங்கள் பொறுப்பான பத்திரிகையாளர் நிறுவனமாக நம்பிக்கையை ஏந்தி வருகிறோம். நாங்கள் தரமான உள்ளடக்கம் உருவாக்கும் YouTubers-க்கு குறைந்த கட்டணத்தில் PTI வீடியோக்களை வழங்குகிறோம்.”
PTI தரப்பில், தங்களது விற்பனை மற்றும் விளம்பரக் குழுவை தொடர்புகொள்ளலாம் என அறிவுறுத்தியுள்ளது.