புதிய ரேஷன் கார்டுக்காக சுமார் 3 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து காத்திருக்கும் நிலையில் அவர்களுக்கு ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
குறைந்த விலையில் உணவு பொருட்கள் நியாய விலை கடைகளில் வழங்கி வரும் நிலையில் ரேஷன் கார்டு மூலம் இந்த பொருட்களை பொதுமக்கள் வாங்கி பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாத நிலையில் விரைவில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் உள்பட ஒரு சில காரணங்களால் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது புதிய ரேஷன் கார்டு வழங்குவதற்கான பணிகள் ஆரம்பம் ஆகி உள்ளதாக தெரிகிறது.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு கோரி 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் இவர்களது விண்ணப்பங்கள் பரிசீலனை நடைபெற்று வருவதாகவும் வரும் ஆகஸ்ட் மாதம் புதிய அட்டைகள் வழங்கும் பணி தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே விரைவில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் குடும்ப அட்டை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் குடும்ப அட்டை மாற்றம், புதிய அட்டைக்கான விண்ணப்பம் செய்ய www.tnpds.gov.in என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக பருப்பு மற்றும் பாமாயில் சரியாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இந்த பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், சோப்பு உள்பட ஒரு சில பொருட்கள் புதிதாக அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிகிறது.