மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ள நிலையில், ஏராளமான மக்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்கின்றனர். ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட பல சேமிப்புகளில் கிடைக்கும் வருமானத்தை விட, மியூச்சுவல் ஃபண்டில் கிடைக்கும் வருமானம் அதிகம் என்றும், நீண்ட கால மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்புக்கு குறைந்தபட்சம் 12 முதல் 15 சதவீதம் வரை வருமானம் கிடைப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் அந்த பணத்தை எடுக்க கூடாது என்றும், நீண்ட காலத்திற்கு முதலீடு செய்தால் மட்டுமே அது நல்ல பலனை கொடுக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதே நேரத்தில் திடீரென அவசர செலவு ஏற்பட்டால், மியூச்சுவல் ஃபண்டில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தற்போது மியூச்சுவல் ஃபண்டை அவசர தேவைக்கு விற்பனை செய்யாமல், அடமானம் வைத்துக் கொள்ளும் புதிய முறை அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்பவர்கள் தங்கள் மியூச்சுவல் ஃபண்டை அடமானம் வைத்துக் கொள்ளலாம் என்றும், இதற்கான பல நிறுவனங்கள் வசதிகளை செய்து கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 12 முதல் 13 சதவீதம் வரை வட்டி இருக்கும் என்றும், எவ்வளவு சீக்கிரம் பணத்தை திரும்ப செலுத்துகிறோமோ அவ்வளவு வட்டி குறையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதே நேரத்தில் வெளிநாட்டு இந்தியர்கள், குழந்தைகள் பெயரில் இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட், வருமான வரி சேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் ஆகிய மியூச்சுவல் பண்ட்களுக்கு மட்டும் சில குறிப்பிட்ட காலத்திற்குள் அடமானம் வைக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற அனைவரும் மியூச்சுவல் ஃபண்ட் தொகையின் 50 சதவீதம் வரை கடன் பெற்றுக்கொள்ளலாம்.