நட்புன்னா சும்மா இல்லடா.. மோடியின் ஒரே ஒரு சந்திப்பு தான்.. மொத்த பிரச்சனையும் தீர்ந்தது.. மீண்டும் நட்புடன் இந்தியா – கனடா..!

  ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்து இந்தியா – கனடா உறவுகளை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர முதலீடுகளும், ஜனநாயக உறவின்…

canada

 

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்து இந்தியா – கனடா உறவுகளை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர முதலீடுகளும், ஜனநாயக உறவின் முக்கிய தூண்கள் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்த சந்திப்புக்குப் பிறகு, பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ தளத்தில் கார்னியுடன் இருக்கும் படங்களைப் பகிர்ந்து, ஜி7 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காக கனடா அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். “இந்தியாவுக்கும் கனடாவுக்கும் ஜனநாயகம், சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி மீது வலுவான நம்பிக்கை உண்டு. வர்த்தகம், எரிசக்தி, விண்வெளி, தூய்மையான எரிசக்தி, அரிய கனிமங்கள், உரங்கள் போன்ற பல துறைகளில் இணைந்து செயல்பட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன” என்றும் குறிப்பிட்டார். கார்னியின் அண்மைய தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த மோடி, வரும் காலத்தில் இரு நாடுகளும் பல துறைகளில் இணைந்து முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக பிரதமர் மோடியை வரவேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி, “ஜி7 மாநாட்டில் உங்களை வரவேற்பது ஒரு பெரிய கவுரவம். உங்கள் நாட்டின் முக்கியத்துவம், உங்களின் சிறந்த தலைமைத்துவம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, பயங்கரவாத எதிர்ப்பு போன்ற முக்கிய சவால்களை நாம் இணைந்து எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்திற்கு இது ஒரு சான்று” என்றார். மேலும், “நீங்கள் இங்கே இருப்பது எனக்குப் பெரும் பெருமை” என்றும் தெரிவித்தார்.

கடந்த 2023-ஆம் ஆண்டில், காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசு முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து, கனடா 6 இந்திய நபர்களை வெளியேற்ற, பதிலுக்கு இந்தியாவும் ஆறு கனடா நபர்களை வெளியேற்றியது. இதனால் பல ஆண்டுகளாக இருந்த இந்தியா – கனடா நட்பில் விரிசல் ஏற்பட்டு உயர் மட்டப் பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்பட்டது.

ஆனால் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு பிறகு ஏப்ரல் மாதம் கனடா பிரதமராக பொறுப்பேற்ற மார்க் கார்னி, பிரதமர் மோடியை வரவேற்றதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதை காட்டுகிறது.