முக்கிய பண்டிகை தினத்தில், நொய்டாவை சேர்ந்த பெண் ஒருவர் “சுவிக்கி” செயலியின் மூலம் சைவ பிரியாணி ஆர்டர் செய்திருந்தார். ஆனால், அவருக்கு சிக்கன் பிரியாணி அனுப்பிய ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், ஒரு இளம் பெண் உணவு டெலிவரி “சுவிக்கி” செயலியை பயன்படுத்தி பண்டிகையை கொண்டாடும் வகையில் சைவ பிரியாணி ஆர்டர் செய்ததாகவும், அவருக்கு பிரியாணி டெலிவரி செய்யப்பட்டபோது ஓப்பன் செய்து சாப்பிடும் போது சிக்கன் வாசனை அடித்ததும் அதிர்ச்சி அடைந்ததாகவும் கண்ணீருடன் தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
“நான் ஒரு தூய சைவர். நான் சைவம் மட்டுமே சாப்பிடும் பெண்மணி. இந்த பண்டிகை நேரத்தில் எனக்கு அசைவ பிரியாணியை அனுப்பி இருக்கிறார்கள். இது திட்டமிட்ட விஷயம் போல் தெரிகிறது. சைவ பிரியாணி ஆர்டர் செய்த எனக்கு எப்படி அசைவ பிரியாணி அனுப்பலாம்?” என அவர் கண்ணீருடன் கேட்டுள்ளார். மேலும், இது குறித்து புகார் அளிக்க கஸ்டமர் கேர் தொடர்புகொண்டபோது, யாரும் பதில் அளிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தாங்களாகவே வழக்கு பதிவு செய்து ஹோட்டல் உரிமையாளரை கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும், இது மத சம்பந்தமான நிகழ்வு என்பதால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு விடப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்த கைது நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தவறுதலாக நடந்த ஒரு நிகழ்வுக்கு கைது நடவடிக்கை எடுப்பது மிகவும் கடுமையான தண்டனை என்றும் இது ஒன்றும் கொலை குற்றம் அல்ல என்றும் யாரும் திட்டமிட்டு சைவ பிரியாணி ஆர்டர் செய்தவர்களுக்கு சிக்கன் பிரியாணி அனுப்ப மாட்டார்கள் என்றும் ஊழியர்கள் செய்த கவனக்குறைவுக்கு ஓட்டல் உரிமையாளரை கைது செய்வது ரொம்ப வினோதமாக இருக்கிறது என்றும் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்