பேஸ்புக் நிறுவனம் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 11 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிய நிலையில் தற்போது மேலும் 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் முன்னணி நிறுவனங்களான கூகுள் அமேசான் ஃபேஸ்புக் ட்விட்டர் உள்பட பல நிறுவனங்கள் கடந்து சில மாதங்களாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி சில நிறுவனங்கள் இரண்டாம் கட்ட வேலை நீக்க நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
இந்த நிலையில் ஏற்கனவே சுமார் 11 ஆயிரம் ஊழியர்களை பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா பணி நீக்கம் செய்த நிலையில் தற்போது மேலும் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் ஈமெயில் அறிவிப்புகள் வரும் என்றும் கூறப்படுகிறது
துவக்க நிலை ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் இந்த சுற்றில் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. பேஸ்புக் இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் தற்போது 86 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பணி செய்து வரும் நிலையில் அதில் 4000 ஊழியர்கள் குறைக்கப்படுவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பேஸ்புக் நிறுவனம் மட்டுமின்றி வேறு சில நிறுவனங்களும் இந்த ஆண்டில் பணி நீக்க நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின்னால் பணவீக்கம், வங்கிகளின் வட்டி விகிதம் அதிகரிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் லாபம் குறைந்துவிட்டது என்றும் அதனால் தான் பணிநீக்க நடவடிக்கை மற்றும் சிக்கன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதே ரீதியில் சென்றால் இந்தியா உள்பட உலக நாடுகளில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.