திரைத்துறையில் முன்னணி நடிகராகவும், சமூக சேவகராகவும் விளங்கும் ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ஊடகச் சந்திப்பு ஒன்றில் பேசிய கருத்துக்கள், தமிழக ஊடகங்களாலும் சில அரசியல் தரப்புகளாலும் முற்றிலும் தவறான கோணத்தில் திரிக்கப்பட்டு மிகப்பெரிய சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரு புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, புதிய சூழலுக்கு ஏற்ப அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவும், அங்குள்ள சவால்களைப் புரிந்துகொள்ளவும் கால அவகாசம் தேவைப்படும் என்பதை விளக்குவதற்காக அவர் ஒரு எளிய உதாரணத்தைக் கையாண்டார். “நாம் ஒரு புதிய வீட்டிற்குச் செல்லும்போது அங்கிருக்கும் சூழலை முழுமையாகப் புரிந்துகொள்ள சில நாட்கள் ஆகும், ஏன், அந்தத் தெருவில் இருக்கும் நாய் கூட நம்மைப் பார்த்து ஆரம்பத்தில் குரைக்கும், அதற்கு பிஸ்கட்டோ பிரியாணியோ கொடுத்துப் பழகிய பின்னரே அது நம்மோடு இணக்கமாகும்” என்ற அர்த்தத்தில்தான் அவர் பேசினார்.
ஆனா, தமிழ்நாட்டின் சில முன்னணி ஊடகங்களும் சமூக ஊடகப் பக்கங்களும் இந்த எதார்த்தமான பேச்சை, “மக்களைத் தெருநாய்களுடன் ஒப்பிட்டுப் பேசிய ராகவா லாரன்ஸ்” என்ற ரீதியில் மிக மோசமான தலைப்புகளுடன் செய்தியாக வெளியிட்டன. முழு வீடியோவையும் பார்க்காமல், லாரன்ஸ் பேசியதன் உண்மையான பின்னணியைப் புரிந்துகொள்ளாமல், வெறும் சில நொடிகள் ஓடக்கூடிய கிளிப்பிங்குகளை மட்டும் வெட்டி எடுத்துக்கொண்டு இந்த அவதூறு பரப்பப்பட்டது. ஒரு மனிதன் தான் சொல்ல வந்த நல்ல கருத்தை விட்டுவிட்டு, அதில் இருக்கும் ஒரு வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு ஒட்டுமொத்த பொதுமக்களையும் அவர் கொச்சைப்படுத்திவிட்டார் என்பது போல சித்திரரிப்பது எந்த வகையான ஊடக தர்மம் என்ற கேள்வி இங்கே எழுகிறது.
இதுதான் இன்றைய தமிழ்நாட்டு ஊடகங்களின் எதார்த்தமான முகமாகவும், இங்குள்ள அரசியல் களம் எவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்தது என்பதற்கான சான்றாகவும் இருக்கிறது. இதனால்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், ஆரம்பத்திலிருந்தே இந்த பிரதான ஊடகங்களையும் அவர்களின் உள்நோக்கம் கொண்ட விவாதங்களையும் முற்றிலும் தவிர்த்து வருகிறார்.
ஊடகங்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கிற்காகவும், சில அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காகவும் எந்தவொரு நல்ல விஷயத்தையும் எப்படி திரிப்பார்கள் என்பதை விஜய் மிக துல்லியமாக கணித்து வைத்திருக்கிறார். அதனால்தான் அவர் நேரிடையாக மக்களை மட்டுமே நம்பி, மீடியாக்களின் பக்கம் தலைவைத்துக் கூட பார்ப்பதில்லை என்ற உண்மை இப்போது லாரன்ஸ் விஷயத்தின் மூலம் உலகிற்கு பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது.
லாரன்ஸ் அவர்கள் பல வருடங்களாக தனது சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை கொண்டு ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து பல நற்பணிகளை செய்து வருகிறார். தாய்க்கு நிகராக தனது ரசிகர்களையும் பொதுமக்களையும் மதிக்கும் ஒரு மனிதர், எப்படி மக்களை பார்த்து அநாகரிகமாக பேசுவார் என்ற குறைந்தபட்ச பொது அறிவு கூட இல்லாமல் இத்தகைய நெகட்டிவ் செய்திகள் பரப்பப்படுவது வேதனைக்குரியது. தான் ஒருபோதும் மக்களை தவறாக குறிப்பிடவில்லை என்றும், புதிய சூழலை விளக்குவதற்காகவே அந்த உதாரணத்தை கூறினேன் என்றும் அவர் உடனடியாக எக்ஸ் தளத்தில் விளக்கமளிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
சமீபகாலமாக ராகவா லாரன்ஸ் அரசியலுக்கு வரப்போவதாக சில சமிக்ஞைகளை கொடுத்து, மக்களிடம் கருத்து கேட்டு வந்த சூழலிலேயே இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. லாரன்ஸ் போன்ற ஒரு தூய்மையான நல்ல உள்ளம் கொண்ட மனிதர் தயவுசெய்து இந்த அழுக்கு நிறைந்த அரசியல் களத்திற்குள் வர வேண்டாம் என்பதே பல நடுநிலையாளர்களின் விருப்பமாக உள்ளது. நீங்கள் சேவை செய்ய அரசியலுக்கு வர வேண்டிய அவசியமில்லை, தனி மனிதனாகவே உங்களால் லட்சக்கணக்கான ஏழைகளுக்கு உதவ முடிகிறது. ஆனால், நீங்கள் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்குள் நுழைந்தால், நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், மூச்சும் கூட இதேபோன்று நூறு மடங்கு மோசமாகத் திரிக்கப்பட்டு உங்களை ஒரு வில்லனை போல காட்ட இங்கிருக்கும் கூட்டங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.
இத்தனை வருடங்களாக நீங்கள் ரத்தம் சிந்தி, உழைத்து சம்பாதித்த உங்களது நல்ல பெயரையும், மக்கள் மத்தியில் உங்களுக்கு இருக்கும் நன்மதிப்பையும் ஒரே ஒரு நிமிடத்தில் காலியாக்க இந்த அரசியல் சிஸ்டமும், அதற்கு துணைபோகும் சில ஊடகங்களும் துணிந்துவிடும். உங்களது தூய்மையான எண்ணங்களுக்கு இந்த நச்சு அரசியல் களம் தகுதியானது அல்ல என்பதை இந்த ‘தெருநாய்’ விவகாரமே உங்களுக்கு உணர்த்தியிருக்கும். எனவே, மக்கள் மீது நீங்கள் வைத்துள்ள அன்பையும், உங்களது உன்னதமான சமூக சேவைகளையும் எப்போதும் போல தனிப்பாதையிலேயே தொடர்ந்து கொண்டு செல்வதே உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் பாதுகாப்பானது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
