குஜராத் உயர் நீதிமன்றத்தில், காணொளி காட்சி வழியாக நடந்த வழக்கு விசாரணையின்போது, ஒருவர் கழிப்பறையில் அமர்ந்து பங்கேற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கேலியையும், நீதிமன்ற மாண்பு குறித்த கவலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்வது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியது. இந்த வழக்கில் எதிர் மனுதாரராகவும், அசல் புகார்தாரராகவும் ஆஜரான சமத் பேட்டரி என்ற நபர் காணொளி விசாரணையில் இணைந்திருந்தார். முதலில், அந்த நபர் மிக அருகில் இருந்து தெளிவாக தெரிந்தார். அவர் கழுத்தில் ப்ளூடூத் இயர்போன் அணிந்திருந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அவர் தனது தொலைபேசியை மறுசீரமைக்க, அவர் ஒரு கழிப்பறையில் அமர்ந்திருப்பது எதிர்பாராத விதமாக காட்சிக்கு வந்தது.
அந்த நபர் நீதிமன்ற அமர்வுடன் இணைந்திருந்தபடியே தனது டாய்லெட் வேலைகளை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. பின்னர் அவர் கைகளை துடைத்துக் கொண்டு, கழிப்பறையை விட்டு வெளியே வந்து, சில நிமிடங்களுக்கு பிறகு வேறொரு அறையில் மீண்டும் தோன்றினார். எதுவும் நடக்காதது போல அவர் காணப்பட்டார். அந்த நபரின் இந்த நடத்தை இணையத்தில் பரவலான கண்டனத்தை பெற்றது, குறிப்பாக சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர். நீதிமன்ற நடவடிக்கைகளில் காணொளி வாயிலாக கலந்து கொள்ளும்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
ஒரு எக்ஸ் பயனர், “வழக்கறிஞர்கள் மட்டுமே காணொளி மூலம் ஆஜராக அனுமதிக்கப்பட வேண்டும். ஒரு வாடிக்கையாளர் அவருடன் இணைய விரும்பினால், அவர் வழக்கறிஞரின் அறையில் இருந்து இணைய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் உலக அளவில் வெட்கக்கேடானது. இந்த துணிச்சலை நினைத்து பாருங்கள். கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்,” என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையில், சிலர் இந்த காணொளி எடிட் செய்யப்பட்டது அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது என்றும் ஒரு பகுதியினர் சந்தேகம் எழுப்பினர். இந்த சம்பவத்தின் நம்பகத்தன்மையை தனிப்பட்ட முறையில் இன்னும் யாரும் உறுதி செய்யவில்லை.
கோவிட்-19 தொற்றுநோய்க்கு பிறகு பல இடங்களில் காணொளி நீதிமன்ற விசாரணைகள் சாதாரணமாகிவிட்ட நிலையில், இந்த சம்பவம் காணொளி கூட்டங்களின்போது பொருத்தமான நடத்தை குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
காணொளி விசாரணையின்போது நீதிமன்ற மாண்பை கடைப்பிடிக்காத சம்பவம் இது முதல் முறை அல்ல. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத் தொடக்கத்தில், குஜராத் உயர் நீதிமன்றம், காணொளி விசாரணையின்போது சிகரெட் புகைத்த ஒரு மனுதாரருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
https://x.com/advsanjoy/status/1938446384069243133