கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கர்நாடகாவில் வெளியிட போவதில்லை என, படத்தின் விநியோகஸ்தர் வெங்கடேஷ் கமலாகர் நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார். இந்தியா முழுவதும் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், கர்நாடகாவில் இந்த படம் எதிர்பார்த்த வசூலை கொடுக்காது என்று அவர் கருதுகிறார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘தக்லைஃப்’ ஜூன் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியானது. ஆனால், “கன்னடம், தமிழில் இருந்து பிறந்தது” என்று கமல்ஹாசன் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து காரணமாக, கர்நாடகாவில் படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அங்கு இந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை.
படத்தை கர்நாடகாவில் வெளியிட கோரி பெங்களூருவை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜூன் 17 அன்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதாவது, ஒரு படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைத்ததும், அதை திரையரங்குகளில் வெளியிடுவதை உறுதி செய்வது மாநில அரசின் கடமை என்று திட்டவட்டமாக கூறியது.
இதுகுறித்து பேசிய வெங்கடேஷ் கமலாகர், கமல்ஹாசன் கன்னட மொழி குறித்துக் கூறிய கருத்துக்களால் கன்னட மக்களின் உணர்வுகள் புண்பட்டுள்ள நிலையில், படத்தை வெளியிடுவது சரியான முடிவாக இருக்காது என குறிப்பிட்டார்.
“ஆனால், முக்கியமாக, இப்போது பட வெளியீடு நல்ல வியாபார முடிவு இல்லை. அவரது முந்தைய படமான ‘இந்தியன் 2’ கூட கர்நாடகாவில் பெரிய அளவில் வசூல் செய்யவில்லை,” என்று கமலாகர் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படம் கர்நாடகாவில் வெற்றி பெற்றாலும், எந்த படமாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு பார்க்கக்கூடிய ரசிகர் பட்டாளம் இங்கு அவருக்கு இல்லை என விநியோகஸ்தர் கூறினார். “அவரது படங்களின் வெற்றி படத்தின் தரத்தை பொறுத்தது. ‘தக் லைஃப்’ பொதுவாகப்பலரால் ஒரு நல்ல படமாக கருதப்படவில்லை. அதனால், இப்போது வெளியிடுவது மிகவும் ஆபத்தானது,” என்று பெரிய பட்ஜெட் தமிழ் படங்களை கர்நாடகாவில் விநியோகிக்கும் கமலாகர் விளக்கினார்.
திரைத்துறை வட்டாரங்களின்படி, விநியோகஸ்தர் சுமார் 9 கோடி ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பண தொகையை வெளியிட மறுத்த கமலாகர், அதை திரும்பப் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது என நம்பிக்கை தெரிவித்தார். “இது எங்கள் தவறு இல்லை. நிலைமை இப்படி ஆகிவிட்டது. லாபம் இல்லாதபோது, எந்த திரையரங்கு உரிமையாளர் படத்தை திரையிட ஒப்புக்கொள்வார்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில், உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, பெங்களூருவில் உள்ள பல கன்னட ஆதரவு அமைப்புகள் திரையரங்குகளில் இந்த படத்தைக் காட்ட கூடாது என வலியுறுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
’தக்லைஃப்’ திரைப்படம் தமிழ்நாட்டிலேயே ஓடவில்லை, எனவே இரண்டு வாரங்கள் கழித்து நெகட்டிவ் ரிசல்ட் வந்தபின்னர் திரையிடுவதால் என்ன லாபம்? என்று தான் பெரும்பாலான விநியோகிஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் நினைக்கின்றனர். எனவே ‘இனிமேல் வயசுக்கு வந்தா என்ன? என்ற காமெடி தான் கர்நாடகாவில் தக்லைப் படத்தின் நிலைமை உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
