தமிழக அரசியலில் ‘மாற்றம்’ எனும் முழக்கத்துடன் 2018-ஆம் ஆண்டு களம் கண்ட மக்கள் நீதி மய்யம் (மநீம), தற்போது எதிர்கொண்டு வரும் விமர்சனங்கள் அக்கட்சியின் அஸ்திவாரத்தையே உலுக்கி வருகின்றன. குறிப்பாக, கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் ஒரு ராஜ்யசபா சீட்டை பெற்றதும், வரும் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடாமல் திமுகவிற்கு ஆதரவு அளிக்க முடிவெடுத்திருப்பதும் நெட்டிசன்களின் காரசாரமான கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. “ஊழலை ஒழிப்பேன், நேர்மையான அரசியலை தருவேன்” என்று சொல்லிவிட்டு டார்ச் லைட்டையெல்லாம் உடைத்த கமல்ஹாசன், இன்று அதே ஆளுங்கட்சியின் நிழலில் தஞ்சம் புகுந்திருப்பது அவரது ஆரம்பகால வீரவசனங்களுக்கு முரணாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஒரு அரசியல் கட்சி என்பது தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் செல்வாக்கை அளவிடுவதற்கும், அதிகாரத்தின் மூலம் கொள்கைகளை செயல்படுத்துவதற்கும் உருவாக்கப்படுவது. ஆனால், மக்கள் நீதி மய்யம் தனது தனித்துவமான அடையாளத்தை இழந்து, மற்றொரு கட்சியின் வெற்றிக்கு வேலை செய்யும் ஒரு துணை கிளையாக மாறிவிட்டதோ என்ற சந்தேகம் வலுக்கிறது. “ஒரு கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடாமல் இன்னொரு கட்சியின் வெற்றிக்கு வேலை செய்வதற்கு எதற்காக ஒரு தனி அமைப்பு? என்ற கேள்வி மிகவும் நியாயமானது. இது கட்சி தொண்டர்களிடையே ஒருவித சோர்வையும், பொதுமக்களிடையே நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டது போல, கமல்ஹாசனும் பேசாமல் தனது கட்சியை திமுகவுடன் இணைத்துவிடலாமே என்ற ஆலோசனைகளை நெட்டிசன்கள் கிண்டலாக முன்வைத்து வருகின்றனர். கொள்கை ரீதியாக முரண்பட்டாலும், சரத்குமார் ஒரு தெளிவான முடிவை எடுத்து தனது அரசியல் பயணத்தை தொடர்கிறார். ஆனால், கமல்ஹாசன் ஒருபுறம் தனிக்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தையும், மறுபுறம் திமுகவின் ஆதரவாளர் என்ற நிலையையும் கையாள்வது இரட்டை வேடம் போடுவது போல இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கூறி, கடைசி நேரத்தில் உடல்நிலையை காரணம் காட்டி ஒதுங்கிக் கொண்டது எவ்வளவோ மேலானது என்ற கருத்தும் பரவலாக பேசப்படுகிறது. ரஜினி மாதிரி கண்ணியமாக ஒதுங்கியிருக்கலாம், அதை விடுத்து பெயரளவில் ஒரு கட்சியை வைத்துக்கொண்டு சந்தர்ப்பவாத அரசியல் செய்வது கமல்ஹாசனுக்கு அழகல்ல” என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். சினிமாவில் ‘உலக நாயகன்’ என்று போற்றப்படும் கமல், அரசியலில் காமெடியனாக, சுயநலவாதியாக மட்டுமே பார்க்கப்படுவது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக உள்ளது.
மாற்றம் வேண்டும் என்று சொல்லி அரசியலுக்கு வந்துவிட்டு, திமுக மற்றும் அதிமுக போன்ற பலமான கட்சிகளை எதிர்க்க துணிவில்லாத போது, எதற்காக ஒரு மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற தார்மீகக் கேள்வி எழுகிறது. கமல்ஹாசனின் இந்த நகர்வுகள், அவருக்கு வழங்கப்பட்ட ராஜ்யசபா சீட்டுக்காக செய்யப்பட்ட ஒரு அரசியல் உடன்பாடு மட்டுமே தவிர, மக்கள் நலனுக்கானது அல்ல என்ற விமர்சனத்தை யாராலும் மறுக்க முடியவில்லை. இது மநீம கட்சியின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இறுதியாக, கமல்ஹாசன் தனது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அவர் இந்த விஷயத்தில் தனது வாக்காளர்களுக்கு அளித்த நம்பிக்கையை சிதைத்துவிட்டதாகவே தெரிகிறது. வெறும் சமூக வலைதள அறிக்கைகளோடும், கூட்டணி கட்சிகளுக்காக பிரச்சாரம் செய்வதோடும் தனது அரசியல் பயணத்தை அவர் நிறுத்திக்கொண்டால், தமிழக அரசியல் வரலாற்றில் மக்கள் நீதி மய்யம் ஒரு தற்காலிக குமிழியாக மட்டுமே எஞ்சி நிற்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
