ஜர்னலிசம் எல்லாம் ஒரு வேலையா? ராஜினாமா செய்துவிட்டு கேண்டீனில் வேலை செய்யும் இளம்பெண்..!

  ஜர்னலிசம் முதுநிலை படிப்பு முடித்த இளம் பெண் ஒருவர், அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கேண்டினில் காய்கறி நறுக்குவது, சமையல் செய்வது, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறுவது போன்ற வேலைகளில்…

canteen

 

ஜர்னலிசம் முதுநிலை படிப்பு முடித்த இளம் பெண் ஒருவர், அந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு கேண்டினில் காய்கறி நறுக்குவது, சமையல் செய்வது, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்த வேலை தான் தனது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஹூவான் என்பவர், ஜர்னலிசம் முதுகலை பட்டம் பெற்று அதன் பின்னர் தனியார் மற்றும் அரசு ஊடக நிறுவனங்களில் பயிற்சி மேற்கொண்டார். இதனை அடுத்து, அவர் மிகப்பெரிய ஜர்னலிஸ்ட் ஆவார் என்று அவரது நண்பர்களும் பெற்றோர்களும் எண்ணிக் கொண்டிருந்த நிலையில், சில மாதங்களில் அவர் தனக்கு கிடைத்த ஜர்னலிசம் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். தற்போது, ஒரு கேண்டினில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் கூறியபோது, “இந்த வேலையில் கடினமாக உழைத்தாலும் ஒரு விதமான மனநிம்மதி கிடைக்கிறது. ஒவ்வொரு நாளும் காய்கறிகள் வெட்டும் போது என் கரங்கள் வீங்கி இருந்தாலும், அதை தாங்கிக்கொண்டு மறுநாளும் வேலைக்கு வருகிறேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

இணையதளங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களில் வேலை செய்தபோது, “ஒவ்வொரு நாளும் மன அழுத்தத்துடன் இருந்தேன். எப்போதும் என் டீம் லீடருக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். அலுவலகத்தில் இருந்தாலும் சரி, வீட்டுக்கு வந்தாலும் சரி, 24 மணி நேரமும் பணியை பற்றியே சிந்திக்க வேண்டியிருந்தது. எப்போது தூங்குவோம், எப்போது விழிப்போம் என்பதே கூட தெரியாமல் வேலை செய்துகொண்டிருந்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது சம்பளம் குறைவாக இருந்தாலும், தான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மன அமைதி கிடைத்திருப்பதாகவும், எந்த விதமான மேலதிக அழுத்தமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். “சில ஆண்டுகள் கழித்து, நான் கேண்டின் மேனேஜர் பதவிக்கு உயர வேண்டும் என்பதே என்னுடைய ஆசை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரது கருத்துக்கு ஏராளமான நேர்மறை கருத்துக்கள் குவிந்துள்ளன. அதேசமயம், சில எதிர்மறை கருத்துகளும் பதிவாகியுள்ளன. “கஷ்டப்பட்டு ஜர்னலிசம் படித்து முடித்துவிட்டு, காய்கறி வேலை செய்வது புத்திசாலித்தனம் இல்லை” என்று சிலர் விமர்சித்துள்ளனர். இருப்பினும், “வாழ்க்கையில் மன நிம்மதி முக்கியம்” என்பதையும் பலர் ஒப்புக்கொண்டுள்ளனர். அவரது பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.