பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாக எந்த விதமான ஐசிசி கிரிக்கெட் தொடர்களும் நடைபெறாததால், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஒரு கவுரவமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த தொடர் பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய வாய்ப்பாக இருக்கும் என்றும், அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு மிகப்பெரிய வருமானம் தரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஏற்கனவே, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு பொருளாதார ரீதியாக மிக மோசமான நிலைகளில் இருந்தது. பாகிஸ்தானின் மைதானங்கள் சர்வதேச தரத்தில் இல்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபிக்காக லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டன. முதலில் ரூ.383 கோடியில் புதுப்பிக்க திட்டமிடப்பட்ட நிலையில், ரூ.561 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், இவ்வளவு செலவு செய்தும் பயன் இல்லாமல் போனது. பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்ததால், பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்தது. இந்தியா விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்தப்பட்டதால், பாகிஸ்தானில் வெறும் சில போட்டிகள் மட்டுமே நடந்தது. அதுவும், பாகிஸ்தானில் நடந்த மூன்று போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி, பாகிஸ்தான் இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் லீக் கட்டத்திலேயே வெளியேறியதும் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு பாகிஸ்தான் வெளியேறியதும் இந்த தொடரை பார்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை.
இந்தியா-பாகிஸ்தான் போட்டிகளை உலகளவில் மிக அதிகமான பார்வையாளர்கள் பார்த்ததால், ஐசிசியின் ஒளிபரப்பு ஒப்பந்தம் 3 பில்லியன் மதிப்பில் இருந்தது. இதில், இந்தியாவின் பங்குதான் மிக அதிகமாக இருந்தது.
பாகிஸ்தானில் இந்தியா விளையாடவில்லை என்பதால், பாகிஸ்தானுக்கு 120 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், டிக்கெட் விற்பனை உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் வெறும் 52 கோடி மட்டுமே வந்ததால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ரூ.793 கோடி இழப்பு அடைந்தது.
சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்த விரும்பியதும் ஐசிசி அனுமதி வழங்கியது. ஆனால், ஐசிசி தலைவர் ஜெய்ஷா திடீரென இந்தியா பாகிஸ்தானில் விளையாடாது என்று அறிவித்ததன் மூலம், பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஜெய்ஷா வைத்துள்ள மீள முடியாத ஆப்பு, மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.