கைதான இந்திய யூடியூபரின் மொபைலில் 150 பாகிஸ்தானியர்கள் நம்பர்கள்.. லேப்டாப்பில் கொட்டி கிடக்கும் அதிர்ச்சி ரகசியங்கள்..!

  இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில், அவருடைய மொபைலை ஆய்வு செய்ததில், அதில் 150 பாகிஸ்தானியர் நம்பர்கள் இருந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை…

jasbir

 

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த யூடியூபர் ஒருவர் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைது செய்யப்பட்ட நிலையில், அவருடைய மொபைலை ஆய்வு செய்ததில், அதில் 150 பாகிஸ்தானியர் நம்பர்கள் இருந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவருடைய லேப்டாப்பில் பல ரகசியங்கள் கொட்டி கிடப்பதாகவும், அதை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஜஸ்பிர் சிங் என்ற யூடியூபர் “ஜான் மஹால் வீடியோ” என்ற சேனலை நடத்தி வந்தார். அவர் பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்தபோது தான், அவரது மொபைலில் 150 பாகிஸ்தானிய எண்கள் இருப்பதும், அவர்கள் அனைவரிடமும் அவ்வப்போது அவர் தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரியும் டேனிஷ் என்பவருடன் அவர் நெருக்கமாக இருந்து உள்ளார் என்றும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. மேலும், டேனிஷின் அழைப்பின் பேரில் டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின விழாவில் ஜஸ்பிர் சிங் கலந்து கொண்டதாகவும், அங்கு தான் பாகிஸ்தானின் அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் யூடியூபர்களையும் அவர் சந்தித்ததாகவும் தெரியவந்தது.

கடந்த 2020, 2021, 2024 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பாகிஸ்தானுக்கு ஜஸ்பிர் சிங் பயணம் செய்ததாகவும், இந்த பயணத்தின் போது ஐ.எஸ்.ஐ அதிகாரிகளை நேரடியாக சந்தித்து சில முக்கிய தகவல்களை பரிமாறியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு உளவு சொல்வதாக சந்தேகப்பட்டு, அதேபோன்று நடந்து கொண்ட ஜோதியை போலீசார் கைது செய்ததும், அவசரமாக தனது லேப்டாப்பில் இருந்த தகவல்களை ஜஸ்பிர் அழிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்குள் போலீசார் அவரை கைது செய்து, அவருடைய டிஜிட்டல் சாதனங்களை கைப்பற்றி, நீக்கிய டேட்டாக்களையும் மீட்டெடுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மேலும் இரண்டு நாட்கள் ஜஸ்பிர் சிங்கை காவலில் வைத்து விசாரணை செய்ய, நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி பெற்றுள்ளனர். அடுத்த இரண்டு நாட்களில் இன்னும் பல ரகசியங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.