உலகமே சற்றும் எதிர்பாராத, ஒரு ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தை மிஞ்சும் வகையில், இந்தியா ஆப்கானிஸ்தானில் அரங்கேற்றிய மிக முக்கியமான ராஜதந்திர நடவடிக்கையை பற்றி உலகமே ஆச்சரியமாக பேசி வருகிறது. அதை தான் இப்போது பார்க்க போகிறோம். இந்தியா, உலகின் கண்களுக்குத் தெரியாமல், ரகசியமாக செயல்படுத்திய இந்த வியூகத்தை ‘ஆபரேஷன் ஆப்கானிஸ்தான்’ என்றே அழைக்கலாம்.
தற்போது இந்தியாவுக்கும் தாலிபானுக்கும் இடையேயான உறவுகளை நீங்கள் கவனித்திருப்பீர்கள். இந்தியா, தாலிபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானுக்கு பல மில்லியன் டாலர் உதவிகளை வழங்கி வருகிறது; வளர்ச்சி பணிகளுக்கு நிதி அளிக்கிறது. இதை பார்த்து பாகிஸ்தான் வெளிப்படையாகவே பதற்றமடைகிறது.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு, இது பாகிஸ்தான்-தாலிபான் மோதல்களால் தூண்டப்பட்ட ஒரு தற்செயலான நடவடிக்கை போல தெரியலாம். ‘எதிரியின் எதிரி நண்பன்’ என்ற எளிய சமன்பாடாக இது இருக்கலாம் என்று சிலர் நினைக்கலாம். சிலர், “இந்தியா வெறும் கோதுமையையும், மருந்துகளையும் அனுப்பிவிட்டு அதை பெரிய இராஜதந்திரம் என்று சொல்கிறதா?” என்றும் கேள்வி எழுப்பலாம்.
ஆனால், நிஜம் முற்றிலும் வேறு. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த மாபெரும் திருப்புமுனைக்கு பின்னால், இந்தியாவின் மிக அசாதாரணமான 30 ஆண்டு கால ராஜதந்திர வியூகம் உள்ளது. இது பொறுமை, அவமானம், சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான மேதமை ஆகியவற்றால் நிரம்பியது. பயங்கரவாத தாக்குதல்கள், அமெரிக்காவின் அலட்சியம், பாகிஸ்தானின் ஆதிக்கம் என அனைத்தையும் தாங்கி கொண்டு, இந்தியா ஒருபோதும் தனது பணியை நிறுத்தவில்லை. இறுதியில், இந்தியா அனைத்து போட்டியாளர்களையும் விஞ்சி, இன்று ஆப்கானிஸ்தானில் நம்பர் ஒன் வீரராக உருவெடுத்துள்ளது.
இந்த மாபெரும் வெற்றிக்கு பின்னால் அஜித் தோவல், ஜே.பி. சிங், துணிச்சலான உளவுத்துறை அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் எல்லாவற்றையும் பணயம் வைத்த உள்ளூர் ஆப்கானிய தலைவர்கள் போன்ற சில முக்கிய நபர்கள் உள்ளனர்.
இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு ரீதியாக எப்போதும் முக்கியமானதாகவே இருந்துள்ளது. 1947 முதல், இந்தியா ஆப்கானிஸ்தானை எப்போதும் தீவிரமாக கருதியது. ஆனால் 1980-களில் சோவியத்-அமெரிக்கப் பனிப்போர் முஜாஹிதீன்களின் பிறப்புக்கு வழிவகுத்து, ஆட்டம் மாறியது.
1996-ல் தாலிபான் ஆட்சிக்கு வந்தபோதுதான் இந்தியா முதல் உண்மையான சவாலை எதிர்கொண்டது. தாலிபான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவ முயன்றனர். ஆப்கானிஸ்தான் நழுவி போனால், அதன் அலைகள் இந்திய எல்லைகளை பாதிக்கும் என்பதை உணர்ந்த இந்தியா, அமைதியாக தனது முதல் நடவடிக்கையைத் தொடங்கியது: அதுதான் வடக்குக் கூட்டணியை ஆதரித்தது.
வடக்குக் கூட்டணி என்பது 1992 ஆம் ஆண்டு முதல் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டு வந்த, தாலிபானுக்கு எதிரான ஒரு குழு. இதற்கு தலைமை தாங்கியவர் புகழ்பெற்ற அஹமத் ஷா மசூத் ஆவார். 1996 இல் தாலிபான் காபூலை கைப்பற்றியபோது, இந்தியா தனது தூதரகத்தை மூடியது. ஆனால் அதன்பிறகு, இந்தியா உறுதியாக வடக்கு கூட்டணியுடன் நின்றது.
இந்தியா இரகசியமாக, தஜிகிஸ்தானின் ஃபர்கோர் விமானப்படை தளத்திலிருந்து வடக்கு கூட்டணிக்கு வெடிமருந்துகள், மோட்டார் குண்டுகள், ஆயுதங்கள் மற்றும் மருத்துவ பொருட்களை வழங்கியது.
இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ரா, தஜிக் அதிகாரிகளுடன் ஆழ்ந்த உறவுகளை ஏற்படுத்தியது. தஜிகிஸ்தான் அதிபரும் தாலிபானின் தீவிரவாதத்தை எதிர்த்ததால், இந்தியாவை ஒரு இராணுவ தளத்தை உருவாக்க அனுமதித்தார்.
தஜிகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இரு முனைகளிலிருந்தும் ஆப்கானிஸ்தானை இந்தியா உன்னிப்பாக கண்காணிக்கும் ஒரு தற்காப்பு சுவரை அமைத்தது. இராஜதந்திரி பாரத் ராஜ் முட்குமார் உட்பட பலர் இதில் முக்கியப் பங்காற்றினர்.
1999, டிசம்பர் 24 அன்று, இந்திய விமானம் IC814 பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, கந்தஹாருக்கு திருப்பி விடப்பட்டது. 9 நாட்கள் நீடித்த பதட்டமான பேச்சுவார்த்தைக்கு பிறகு, பயணிகளுக்கு ஈடாக இந்தியா பயங்கரவாதிகளை விடுவிக்க நேர்ந்தது. இந்த சம்பவம் தாலிபான் மீதான இந்தியாவின் நம்பிக்கையை நிரந்தரமாக சிதைத்தது. அதன் பிறகுதான், அஜித் தோவல் தலைமையிலான குழு தாலிபானை சுற்றி ஒரு உளவியல் அழுத்தத்தை உருவாக்கும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. கிஸ்ஸார் விமானப்படை தளம் அமைக்கப்பட்டது.
2001 செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்கா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து தாலிபானை அகற்றியது. இது இந்தியாவுக்கு ஒரு புதிய வழியை திறந்தது.
இந்தியா, நேட்டோ படைகளை போல இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு பதிலாக, ஆப்கானிய மக்களின் மனங்களை கவர முடிவு செய்தது. மற்றவர்கள் குண்டுகளை வீசியபோது, இந்தியா சாலைகள், மருத்துவமனைகள், அணைகள் மற்றும் பள்ளிகளை கட்டியது. ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம், மின் நிலையங்கள் என 500க்கும் மேற்பட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா நிதியளித்தது.
படிப்படியாக, ஆப்கானிஸ்தானின் மிகவும் நம்பகமான கூட்டாளியாக இந்தியா மாறியது. இன்றும், சுமார் 70% ஆப்கானியர்கள் இந்தியாவை தங்கள் நெருங்கிய நண்பராக கருதுகின்றனர்.
2008 இல், தாலிபான் காபூலில் உள்ள இந்திய தூதரகத்தில் குண்டு வைத்து 58 பேரை கொன்றது. ஆனாலும், இந்தியா பின்வாங்காமல், அப்போது ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த ஹமீத் கர்சாயுடன் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
2014-ல் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, அஜித் தோவல் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரானார். அவரது ஆலோசனையின்படி, இந்தியா புதிய துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தது. 2015-ல் முதன்முறையாக, தாலிபானுக்கு எதிராகப் போராடிய ஆப்கானிஸ்தான் படைகளுக்கு தாக்குதல் ஹெலிகாப்டர்கள், வெடிமருந்துகள் மற்றும் இராணுவ பயிற்சியை இந்தியா நேரடியாக வழங்கியது. இது தாலிபானுக்குச் சவாலாக இருந்தாலும், இந்தியாவுக்கு ஒரு முக்கிய அரசியல் செல்வாக்கை ஏற்படுத்தியது.
2021-ல் அமெரிக்கப் படைகள் வெளியேறியபோது, தாலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இருபது ஆண்டுகால முதலீடு ஆபத்தில் இருந்தது. ஆனால் இந்தியா பதற்றமடையவில்லை. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அஜித் தோவல், ஜே.பி. சிங் ஆகியோர் இந்த சூழ்நிலையை சிறப்பாகக்கையாண்டனர்.
பல நாடுகள் விலகி சென்றபோது, இந்தியா ஒரு கூர்மையான திருப்பத்தை எடுத்து, பலவீனத்தின் அடிப்படையில் இல்லாமல், நுண்ணறிவுடன் தாலிபானுடன் நேரடியாகப் பேச தொடங்கியது. அப்போது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பணியாற்றி வந்த ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஜே.பி. சிங் தான் இந்த கட்டத்தில் முக்கிய நபர். 2021-22-ல் தாலிபானின் உள்துறை அமைச்சரான சிராஜுதீன் ஹக்கானி போன்றோருடன் இவர் நேரடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
“நாங்கள் உங்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். ஆனால், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை உங்கள் மண்ணில் செயல்பட அனுமதிக்க கூடாது,” என்று இந்தியா தெளிவாக தெரிவித்தது.
அதே நேரத்தில், இந்தியா மனிதாபிமான உதவிகளையும், நிவாரண பொருட்களையும் அனுப்பி, சாதாரண ஆப்கானியர்களிடையே நல்லெண்ணத்தை மீண்டும் கட்டியெழுப்பியது. கத்தார் போன்ற நாடுகள் இதில் மத்தியஸ்தம் செய்தன.
இந்தியாவின் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகள், ஆப்கானிஸ்தான் மீது மெதுவாகவும் புத்திசாலித்தனமாகவும் மீண்டும் செல்வாக்கை ஏற்படுத்தியது. பூகம்பம் போன்ற பேரிடர்களின் போதும், நிவாரண உதவிகளை அனுப்பிய முதல் நாடுகளில் இந்தியா இருந்தது.
பாகிஸ்தானும் சீனாவும் இந்தியாவை ஓரங்கட்ட முயன்றன. ஆனால், ஆப்கானிய மக்கள் பாகிஸ்தானை விட இந்தியாவை அதிகம் நம்பினர். தாலிபானுக்குள்ளேயே உள்ள சில தலைவர்கள் இந்தியாவுடனான ஈடுபாட்டை ஆதரித்தனர்.
ஆப்கானிஸ்தானின் விசுவாசம் இந்தியா பக்கம் சாய்ந்தது. இப்போது, தாலிபானும் பாகிஸ்தானும் வெளிப்படையாக மோதிக்கொண்டுள்ளனர், இது இந்தியா விரும்பிய சரியான திருப்பம்.
தற்போதைய சூழ்நிலையில், தாலிபானால் இந்தியாவை புறக்கணிக்கவோ அல்லது பகைத்து கொள்ளவோ முடியாது. ஆப்கானிஸ்தானில் இந்தியா ஆழ்ந்த உணர்ச்சிப்பூர்வமான மற்றும் வளர்ச்சி அடிப்படையிலான செல்வாக்கை கொண்டுள்ளது. மேலும், உலகிலேயே மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அங்கீகாரம், தாலிபானின் உலக அரங்கில் ஏற்றுக்கொள்ளப்படும் நிலையை அதிகப்படுத்தும்.
இதற்கும் மேலாக, இந்தியாவின் உளவு பிரிவின் ஆழமான செயல்பாடுகள் குறித்து தாலிபானுக்கு நன்றாகவே தெரியும். இப்போதுள்ள சூழ்நிலையில், பாகிஸ்தானில் இருந்தும், மற்ற பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்தும் எழும் சவால்களை சமாளிக்க, தாலிபானுக்கு இந்திய உதவிகள் முன்பை விட அதிகமாக தேவைப்படுகின்றன. மொத்தத்தில் ’ஆபரேஷன் ஆப்கானிஸ்தான்’ என்ற நடவடிக்கையை இந்தியா வெற்றிகரமாக செயல்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளது. இது பாகிஸ்தான் வாலை ஒட்ட நறுக்கும் செயல்களில் ஒன்றாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
