இந்திய மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஒரே நேரத்தில் பல ஸ்டார்ட்அப்களில் பணிபுரிந்ததாக பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில் அவரை அமெரிக்க பிரபல தொழில்நுட்ப நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
அனாலிடிக்ஸ் தளமான மிக்ஸ்பேனலின் இணை நிறுவனரும், தற்போதைய AI நிறுவனமான பிளேகிரவுண்ட் AI-இன் தலைவருமான சுஹைல் தோஷி இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தை தூண்டியுள்ளது. எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியான பதிவுகளில், தோஷி சோஹம் பரேக் என்ற இந்திய டெவலப்பரை குறிப்பிட்டுள்ளார். பரேக் பல தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களில் ஒரே நேரத்தில் பணிபுரிந்து வருவதாகவும், இதன் மூலம் அவர் தினமும் சுமார் 2 லட்ச ரூபாய் சம்பாதிப்பதாகவும், இந்த தகவல்களை அவர் வெளிப்படுத்தவில்லை என்றும் தோஷி குற்றம் சாட்டியுள்ளார்.
பரேக்கை ஒரு “மோசடிக்காரன்” என்று முத்திரை குத்திய தோஷி, கடந்த ஆண்டு பரேக் தனது நிறுவனங்களில் ஒன்றில் வேலைக்கு சேர்ந்ததாகவும், ஆனால் அவரது தவறான நடத்தை கண்டறியப்பட்ட ஒரு வாரத்திற்குள் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். “நான் இந்த நபரை வேலையில் சேர்ந்த முதல் வாரத்திலேயே பணி நீக்கம் செய்தேன், மேலும் பொய் சொல்வதையும், மக்களை ஏமாற்றுவதையும் நிறுத்த சொன்னேன். மற்ற ஸ்டார்ட்அப்கள் இந்த டெவலப்பரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதுகுரித்து அவர் மேலும் கூறியபோது, ‘இந்தியாவை சேர்ந்த சோஹம் பரேக் என்ற ஒரு நபர் ஒரே நேரத்தில் 3-4 ஸ்டார்ட்அப்களில் பணிபுரிகிறார். அவர் YC நிறுவனங்கள் மற்றும் பலவற்றை குறிவைத்து வருகிறார். எச்சரிக்கையாக இருங்கள்,” என்று தோஷி தனது ட்வீட்களில் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
பரேக்கின் ரெஸ்யூமில் பரேக் மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும், ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் முதுகலை பட்டமும் பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த ஆவணத்தின் நம்பகத்தன்மையை தோஷி கேள்விக்குள்ளாக்கினார். “90% ரெஸ்யூம் போலியானது” என்றும், பட்டியலிடப்பட்டுள்ள பல இணைப்புகள் செயல்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நான் இந்த நபருடன் பேசி, அதன் தாக்கத்தை விளக்கி, அவருக்கு உதவி செய்து ஒரு வாய்ப்பை அவருக்கு வழங்க முயற்சித்தேன். ஏனென்றால் சில சமயங்களில் ஒருவருக்கு அது தேவைப்படும். ஆனால் நிச்சயமாக அவர் திருந்துவதாக தெரியவில்லை என்று தோஷி தனது அடுத்தடுத்த பதிவுகளில் ஒன்றில் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் அந்த இளைஞர் ஒரே நேரத்தில் 5 நிறுவனங்களில் வேலை செய்தது அவரது திறமையா? அல்லது மோசடியா? என்ற வாதம் காரசாரமாக நடந்து வருகிறது.