அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு எதிரொலி: இந்தியாவில் மூடப்பட்ட 3 மருத்துவமனைகள்..!

  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று மருத்துவமனைகள் மூடப்பட்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னால் USAID மூலம்…

trump

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு காரணமாக இந்தியாவில் செயல்பட்டு வந்த மூன்று மருத்துவமனைகள் மூடப்பட்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்னால் USAID மூலம் வழங்கப்படும் வெளிநாட்டு நிதி உதவிகள் நிறுத்தப்படும் என்று தெரிவித்தார். இதன் மூலம் ஏராளமான பணம் மிச்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவின் USAID அமைப்பின் நிதி ஆதாரத்தால் இந்தியாவில் செயல்பட்டு வந்த ஹைதராபாத்தில் உள்ள மூன்று கிளினிக்குகள் தற்போது மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கிளினிக்குகள் திருநங்கைகள் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிதாக உருவாக்கிய வெளிநாட்டு கொள்கையின் அடிப்படையில், USAID மூலம் நிதி வழங்குவதை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். இந்த நிதி உதவியால் திருநங்கைகள் சமூகத்திற்கு என உருவாக்கப்பட்ட மருத்துவமனைகளில் மருத்துவ சேவைகள் கிடைத்து வந்தன. இந்தியாவில் இந்த நிதியுதவியால் மகாராஷ்டிரா, புனே, ஹைதராபாத் ஆகிய பகுதிகளில் திருநங்கைகள் மருத்துவமனைகள்  செயல்பட்டு வந்தன.

தற்போது இந்த நிதி நிறுத்தப்பட்டதால், ஹைதராபாத்தில் உள்ள மூன்று கிளினிக்குகள் மூடப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிளினிக்கையும் செயல்பட ஆண்டுக்கு 30 லட்சம் வரை தேவைப்படும் என்றும் ஒவ்வொரு மருத்துவமனையிலும் எட்டு பணியாளர்கள் வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்களுக்கான நிதி ஆதாரம் நிறுத்தப்பட்டதால், மருத்துவமனைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், மாற்று நிதி ஆதாரங்களுக்கான தேடல் நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.