கடந்த 40 ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஆதரவுடன் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை முன்னிறுத்தி, சிந்து நதிநிர் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய முடிவை மறுபரீசிலனை செய்ய மாட்டோம் என ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
சிந்து நதிநீர்ஒப்பந்தம் நீடிக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் கூறியதற்கு பதிலளித்த இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரிஷ், “இந்த ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு நட்புறவை அடிப்படையாக கொண்டு கையெழுத்தானது. ஆனால், பாகிஸ்தான் தொடர்ந்து இதன் விதிகளை மீறி மூன்று முறை இந்தியாவுடன் போர் தொடுத்ததோடு, ஆயிரக்கணக்கான பயங்கரவாத தாக்குதல்களை ஏற்படுத்தி இந்திய மக்களை கொன்றுள்ளது,” என தெரிவித்தார்.
“பாகிஸ்தான், பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் உலக மையமாக மாறிவிட்டது. 65 ஆண்டுகளில் இதுவே முதல் முறை இந்தியா இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தியுள்ளது. காரணம், பாகிஸ்தான் இன்று உலக அளவில் பயங்கரவாதத்தின் மையமாக மாறியுள்ளது. அவர்கள் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா மீது இயக்கி வருகின்றனர்,” என்று ஹரிஷ் கடுமையாக விமர்சித்தார்.
பாகிஸ்தான் தூதர் ஒருவர், ஐ.நா.வில் இந்த ஒப்பந்தத்தை நீடிக்க வேண்டுமென்று கூறியபோது, “தண்ணீர் என்பது போர் ஆயுதமல்ல, அது உயிரின் ஆதாரம்” என தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்த இந்திய தூதர், “உண்மையில், பாகிஸ்தானே தங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளால் இந்த ஒப்பந்தத்தின் நோக்கத்தையே புறக்கணித்து விட்டது” என்று கூறினார்.
பாகிஸ்தானின் பயங்கரவாத உளவுத்தொழிலால் இந்தியாவின் பொதுமக்கள், மதசமரசம் மற்றும் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. “கடந்த நாற்பது ஆண்டுகளில் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்” என்று ஹரிஷ் சுட்டிக்காட்டினார்.
இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்த இந்தியா எடுத்த முடிவிற்கு, ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலே முக்கிய காரணமாக இருந்தது. இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் மறைமுக பிரிவான The Resistance Front பொறுப்பேற்றது.
இந்த விவகாரம், தண்ணீரைப் பற்றிய ஒரு ஒப்பந்தமாக தொடங்கி, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கடுமையான நிலைப்பாட்டில் முடிகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
