லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) ஒரு சாதனையை சத்தமில்லாமல் கின்னஸ் சாதனை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான வாழ்நாள் காப்பீட்டு காப்பீடுகள் விற்றதற்காக, நிறுவனத்துக்கு ‘கின்னஸ் உலக சாதனை’ பட்டம் கிடைத்துள்ளது.
2025 ஜனவரி 20ஆம் தேதி, LIC-யின் 4,52,839 முகவர்கள், இந்திய அளவில் மொத்தம் 5,88,107 காப்பீட்டு திட்டங்களை வெற்றிகரமாக முடித்து வழங்கினர். இந்த அதிரடியான சாதனை, காப்பீட்டு துறையில் முகவர்கள் செய்து காட்டிய உயர்ந்த உற்பத்தி திறனுக்கான புதிய உலக அளவுகோலை நிறுவியது.
“இது எங்கள் முகவர்களின் தீராத முயற்சி, திறமை மற்றும் ஊக்கமிக்க வேலைநெறிகளை நிரூபிக்கும் வலுவான சான்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நிதி பாதுகாப்பு வழங்கும் எங்கள் தணியாத அர்ப்பணத்தை இந்த சாதனை பிரதிபலிக்கிறது.” என LIC தெரிவித்துள்ளது.
இந்த சாதனை முயற்சி, LIC நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சித்தார்த்த மோஹந்தி தொடங்கிய “Mad Million Day” என்ற நிகழ்வின் ஒரு பகுதி. அதன்படி, 2025 ஜனவரி 20 அன்று, ஒவ்வொரு முகவரும் குறைந்தபட்சம் ஒரு காப்பீட்டு திட்டத்தை முடிக்க வேண்டும் எனவே அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மோஹந்தி, “Mad Million Day-யை வரலாற்று சாதனை நாளாக ஆக்கிய வாடிக்கையாளர்கள், முகவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மனமார்ந்த நன்றி,” என தெரிவித்தார்.