மேற்கு வங்க மாநிலத்தில் இருவர் ஆபாச வீடியோக்களைப் பதிவு செய்யும் இணையதளத்தை நடத்தியதாகவும், இவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்றொருவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஹவுரா என்ற பகுதியில் இளம் பெண் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்டு, ஆபாச வீடியோவில் நடிக்கக் கொடுமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை செய்தபோது, ஆபாசப் படங்களை தயாரித்து ஒரு இணையதளத்தை நடத்தி வரும் இருவர், நல்ல சம்பளம் தருவதாக வேலை தேடும் இளம் பெண்களுக்கு ஆசை வார்த்தை கூறி அழைத்து, அதன் பின் ஆபாசப் படங்களில் நடித்தால் லட்சக்கணக்கில் பணம் தருவோம் என்று கூறி நடிக்க வைப்பதாகவும், நடிக்க முடியாது என்று சொல்பவர்களை சித்திரவதை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை அடுத்து போலீசார் அதிரடியாக நடவடிக்கை எடுத்ததில், இருவருமே தலைமறைவாகினர் என்றும், அவர்களில் தற்போது ஒருவர் பிடிபட்ட நிலையில், மற்றொருவர் தலைமறைவாக இருப்பதால் அவரைப் பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இருவரும் மேற்கு வங்க ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்கள் என்றும், அதனால் போலீசார் இந்த வழக்கில் அக்கறை காட்டவில்லை என்றும் பாஜக குற்றம் சாட்டி உள்ளது. திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இருவரும் நடத்தியதாகவும், அதன் மூலம் ஏராளமான ஆபாசப் படங்களை பதிவேற்றி லட்சக்கணக்கில் சம்பாதித்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இணையதளத்தில் பெருகி வரும் குற்றச்செயல்கள் குறித்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை என நெட்டிசன்கள் இந்த வழக்கு குறித்துக் கருத்துப் பதிவு செய்து வருகின்றனர்.