உங்கள் மொபைல் எண் தீவிரவாதியுடன் தொடர்பில் உள்ளது. புதுவகையான மோசடி.. ஜாக்கிரதை..!

உங்கள் மொபைல் எண் தீவிரவாதியுடன் தொடர்பில் இருக்கிறது என்று பயமுறுத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று புதிதாக கிளம்பி இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். ஹைதராபாத்…

fraud

உங்கள் மொபைல் எண் தீவிரவாதியுடன் தொடர்பில் இருக்கிறது என்று பயமுறுத்தி பணம் பறிக்கும் கும்பல் ஒன்று புதிதாக கிளம்பி இருப்பதாகவும் இதனால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

ஹைதராபாத் சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவருக்கு சமீபத்தில் மும்பை காவல்துறையிடமிருந்து அழைப்பு வந்ததாகவும் அந்த அழைப்பில் உங்கள் மொபைல் போன் தீவிரவாதியின் மொபைல் போனில் இருப்பதை அடுத்து உங்களுக்கும் தீவிரவாதிக்கும் சம்பந்தம் உண்டு என்று பயமறுத்தி உள்ளதாக தெரிகிறது.

மேலும் உங்களுடைய வங்கி கணக்கை முடக்க திட்டமிட்டுள்ளதாகவும் உங்கள் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் இதை எல்லாம் சமாளிக்க வேண்டும் என்றால் பணம் கொடுக்க வேண்டும் என்றும் பயமுறுத்தியதாக தெரிகிறது.

இந்த நிலையில் அச்சமடைந்த அந்த ஐடி ஊழியர் இரண்டு தவணைகளில் 11 லட்சம் ரூபாய் கொடுத்ததாகவும் அதன் பின்னர் மேலும் 2 லட்சம் வேண்டும் என்று கேட்டபோதுதான் அவருக்கு சந்தேகம் வந்து சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்த போது மும்பை போலீசார் என்ற பெயரில் அழைத்தது மோசடி பேர்வழி என்று தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே உங்கள் மொபைல் எண் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறது என்று கூறி யாராவது பயமுறுத்தினால் யாரும் ஏமாந்து பணத்தை கொடுத்து விட வேண்டாம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதுபோன்ற மோசடிகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?

எந்தவொரு நபரின் அழைப்பின்  நம்பகத்தன்மையை ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும்.

டிராய் அல்லது காவல்துறை போன்ற அமைப்புகள் தொலைபேசியில் தனிப்பட்ட அல்லது நிதி தகவல்களைக் கேட்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மோசடி பேர்வழிகள் பெரும்பாலும் உங்களை விரைந்து முடிவெடுக்க கட்டாயப்படுத்துவார்கள்.  எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன் நம்பகமான நபர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

உங்கள் தனிப்பட்ட, வங்கி அல்லது பிற முக்கியமான தகவல்களை தெரியாத நபர்களிடம் ஒருபோதும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மேலும் நீங்கள் மோசடி செய்யப்படுகிறீர்கள் என்று சந்தேகித்தால், உடனடியாக காவல்துறை அல்லது சைபர் கிரைம் பிரிவைத் தொடர்பு கொள்ளுங்கள்.