அதிக வாக்கு சதவீதம் என்பது ஆளுங்கட்சிக்கு கெட்ட செய்தி தான்.. ஆட்சி மாற்றம் அல்லது தொங்கு சட்டசபை.. இந்த இரண்டில் ஒன்று தான் ரிசல்ட் வர வாய்ப்பு.. ஆளுங்கட்சியின் அதிருப்தி ஓட்டை அதிகம் பெறுவது அதிமுகவா? தவெகவா? என்பதை பொறுத்தி அடுத்த ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிய வரும்.. எது எப்படியோ திமுக தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை என்பது மட்டும் உறுதி.. அரசியல் வல்லுனர்கள் கருத்து..!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் 85 சதவீதத்தை நெருங்கியுள்ளது, இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. தேர்தல் களம் குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் ஆய்வாளர்கள், பொதுவாக 70…

vote

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில் வாக்குப்பதிவு சதவீதம் 85 சதவீதத்தை நெருங்கியுள்ளது, இது ஒரு சாதாரண நிகழ்வு அல்ல. தேர்தல் களம் குறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் ஆய்வாளர்கள், பொதுவாக 70 அல்லது 75 சதவீதத்தை தாண்டும் வாக்குப்பதிவை ‘ஹெவி போலிங்’ என்று வரையறுக்கிறார்கள்.

வரலாற்று பின்னணியில் இருந்து கடந்த கால தேர்தல்களை பார்க்கும்போது, இத்தகைய அதிரடியான வாக்குப்பதிவு உயர்வு என்பது எப்போதும் ஆளும் தரப்பிற்கு ஒரு கவலையான செய்தியாகவே அமைந்திருக்கிறது. ஒரு அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும்போது எழும் இயல்பான ஆட்சி எதிர்ப்பு உணர்வு மற்றும் மக்களின் உள்ளத்தில் இருக்கும் ஒருவிதமான மாற்றத்திற்கான வேகம் ஆகியவைதான் இத்தகைய பெரிய அளவிலான வாக்குப்பதிவுக்கு வித்திடுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது.

வாக்குப்பதிவு எண்ணிக்கையில் கடந்த 2021-ஆம் ஆண்டை விட இந்த முறை சுமார் 12 சதவீதம் வரை அதிகரித்திருப்பது, தமிழக அரசியலில் ஒரு பலமான அடிநீரோட்டம் நிலவுவதை உறுதிப்படுத்துகிறது. பொதுவாக வாக்குப்பதிவு குறைவாக இருக்கும்போது அது ஆளும் தரப்பிற்கு சாதகமாகவும், வாக்குப்பதிவு அதிகமாகும்போது அது ஆளும் தரப்பிற்கு எதிரான கோப அலையாகவும் பார்க்கப்படும் ‘கன்வென்ஷனல் விஸ்டம்’ இம்முறையும் உண்மையாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மெயின் ஸ்ட்ரீம் மீடியாக்கள் கட்டமைத்த பிம்பங்களை தாண்டி, சாமானிய மக்களின் கோபமும் உணர்வும் வாக்குச்சாவடிகளில் எதிரொலித்திருப்பதை இந்த 85 சதவீத வாக்குப்பதிவு சுட்டிக்காட்டுகிறது. இந்த அலை ஆட்சி மாற்றத்தை நோக்கியதா அல்லது ஒரு பெரிய அதிர்வை நோக்கியதா என்பது மே மாதம் 4-ஆம் தேதி தெரியவரும்.

இந்த தேர்தலில் முக்கோணப் போட்டி நிலவும் சூழலில், ஆளும் தரப்பிற்கு எதிராக பதிவான வாக்குகளை அறுவடை செய்யப்போவது யார் என்பதுதான் தற்போதைய மிகப்பெரிய கேள்வி. கடந்த காலங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே மட்டுமே வாக்குகள் பிரிந்தன. ஆனால், இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. ஆரம்பத்தில் விஜய்யின் வருகையை உதாசனப்படுத்தியவர்கள் கூட, இன்று நிலவும் கள எதார்த்தத்தை புரிந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, பெண் வாக்காளர்களின் ஆதரவு விஜய் தரப்பிற்கு திருப்பியிருப்பது, பாரம்பரிய கட்சிகளின் வாக்கு வங்கியில் ஒரு மிகப்பெரிய ஓட்டையை ஏற்படுத்தியிருப்பதாகவே கணிப்புகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய சூழலில், ஒன்று ஒரு முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படலாம் அல்லது எவராலும் தனித்து பெரும்பான்மை பெற முடியாத ‘தொங்கு சட்டமன்றம்’ உருவாகலாம் என்ற இரு வேறு கணிப்புகள் முன்வைக்கப்படுகின்றன. ஆளும் கட்சியின் வாக்குகள் சிதறும்போது, அவை எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் விஜய்யின் தவெக இடையே பிரிந்து செல்வதால், எந்தவொரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மை கிடைப்பதில் சிக்கல் எழலாம். ஒருவேளை ஆளும் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட, ஒரு தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் என்பது ஆட்சி நிர்வாகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இறுதியாக, இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் ஒரு புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தப் போகிறது. அதிகப்படியான வாக்குப்பதிவு என்பது மக்களின் ஆவேசம் அல்லது கோபம் என்பதை தாண்டி, அவர்கள் அரசியலில் நேரடியாக பங்கெடுக்க தொடங்கிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது. வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததற்கு SIR போன்ற தொழில்நுட்ப காரணங்களைச் சிலர் கூறினாலும், 20 லட்சத்திற்கும் அதிகமான கூடுதல் வாக்காளர்கள் நேரில் வந்து வாக்களித்திருப்பது என்பது ஒரு தெளிவான செய்தியை சொல்கிறது. இந்த அண்டர் கரண்ட் ஆட்சி மாற்றத்தில் முடியுமா அல்லது கூட்டணி ஆட்சியில் முடியுமா என்பது இன்னும் ஒரு சில தினங்களில் தெரிந்துவிடும். எதுவாக இருந்தாலும், தமிழக அரசியல் களம் இனி பழையபடி இருக்காது என்பது மட்டும் உறுதி.