27 வருடங்கள் கழித்து ஜூனில் கனமழை.. இன்னும் 3 நாட்களுக்கு கொட்டும் என தகவல்..!

Published:

27 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன் மாதம் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துள்ள நிலையில் இன்னும் சில நாட்கள் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரலாறு காணாத வகையில் கன மழை பெய்தது. அந்த வகையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவுக்கு ஜூன் மாதம் மழை பெய்துள்ளது என வானிலை ஆய்வு மைய ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை உள்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது என்பதும் மழை நீர் சாலையில் தேங்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மழை குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் கூறிய போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தோன்றிய காற்றின் வேகம் ஆகியவை காரணமாக மழை பெய்து வருகிறது என்று கூறியுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என்று தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று குறிப்பாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் பலத்த வேகத்தில் காற்று வீசும் என்பதால் அந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக கிண்டி கத்திப்பாரா பாலத்திற்கு அடியில் சிக்கிய கார் மிக மீட்கப்பட்டதாகவும் தெரிகிறது.

மேலும் சென்னையின் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து ஸ்தம்பித்த நிலையில் அந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாளையும் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது மழை பெய்து வானிலை மாறி உள்ளதை அடுத்து பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் உங்களுக்காக...