டெல்லியில் சமீபத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது ஆகியவற்றின் சதி பின்னணியை வெளிப்படுத்துவதாக உள்ளன.
டெல்லி தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், இந்திய அதிகாரிகளிடம் ‘ஹன்சுல்லா’ என்ற பெயர் சிக்கியுள்ளது. இது பாகிஸ்தானை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த ஹன்சுல்லா, டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர் முஸம்மில் ஷகீல் என்ற நபருடன் சமூக ஊடகங்களின் ரகசிய குழுக்கள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். பாகிஸ்தானில் உள்ள இந்த ‘ஹன்சுல்லா’ தான் டாக்டர் முஸம்மில் ஷகீலுக்கு வெடிபொருட்களை எப்படித் தயாரிப்பது என்பதற்கான வீடியோ டுட்டோரியலை அனுப்பியுள்ளது. இந்தியாவில் வாங்கிய மூலப்பொருட்களை கொண்டு வெடிகுண்டுகளை தயாரிக்க இவனுக்கு வழிகாட்டியது இவரே.
இந்த ‘ஹன்சுல்லா’ ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் ஹேண்டலராக இருக்கலாம் என்று என்.ஐ.ஏ. சந்தேகிக்கிறது. மேலும், இது ஒரு புனைபெயராக இருக்க வாய்ப்புள்ளதால், இந்த ஹன்சுல்லா ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்டாகவோ அல்லது மௌலானா மசூத் அசாத் ஆகவே இருக்கலாமோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டெல்லி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் மருத்துவம் படித்த தொழில்முறை நபர்கள் ஆவர். இவர்களை மூளைச்சலவை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்றது.மௌலானா இர்பான் ஹமீத் என்ற மதத்தலைவர், தனது மத உபதேசங்களின் மூலம் இந்த மருத்துவர்கள் வலையமைப்பை சேர்ந்த அனைவரையும் மூளைச்சலவை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. எவ்வளவு மோசமான விஷயத்தையும் சரி என்று நம்ப வைக்கும் ஆற்றல் இவருக்கு இருந்திருக்கிறது.
இந்த இர்பானுக்கும், பாகிஸ்தானில் உள்ள ‘ஹன்சுல்லா’ என்ற ஹேண்டலருக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. டாக்டர் முஸம்மில் ஷகீல், 2020-22 காலகட்டத்தில், அன்சர் கஸ்வித் உல்-ஹிந்த் என்ற ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய அமைப்புடன் தொடர்பில் இருந்திருக்கிறான் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சர்வதேசப் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசாத் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தால், ஐ.எஸ்.ஐ.யின் துணை இல்லாமல் இத்தகைய தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்று உறுதியாகக் கூறப்படுகிறது. அப்படியானால், ஐ.எஸ்.ஐ-க்கு இந்த திடீர் தைரியம் எங்கிருந்து வந்தது?
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடந்த பிறகு, பாகிஸ்தான், இந்தியாவுக்கு பயந்து, அமெரிக்கா அல்லது சீனாவை சார்ந்து இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்தியாவை தனியாக சமாளிக்க முடியாது என்று அது உணர்ந்தது. மசூத் அசாத்தை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா நான்கு முறை முயன்றபோதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா முட்டுக்கட்டை போட்டது. சீனா – பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் இருக்கக்கூடாது என்ற வணிக நோக்கத்துக்காகவே சீனா மசூத் அசாத்தை ஆரம்பத்தில் காப்பாற்ற முயன்றது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, பாகிஸ்தான் அமெரிக்காவை சார்ந்திருக்க முடிவு செய்தது. அண்மையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் அமெரிக்கா சென்று வந்த பிறகு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு பலப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சர்வதேசப் அரசியல் மாற்றங்கள் தான், மீண்டும் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ-க்குத் திடீர் தைரியத்தை கொடுத்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ. மூலம் ஜெய்ஷ்-இ-முகமதுவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மிக முக்கியமான பணி, மீண்டும் காஷ்மீரில் அமைதியின்மையையும், கலவரத்தையும் தூண்டுவதுதான். டெல்லி தாக்குதலில் கைது செய்யப்பட்ட காஷ்மீரை சேர்ந்த இரண்டு பேர், இதற்கு முன் அங்குள்ள கல்லெறிக்கும் கும்பலில் இருந்தவர்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
காஷ்மீர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்று பாகிஸ்தான் நினைத்தாலும், ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் உறுதியான நடவடிக்கை பாகிஸ்தானுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. எனினும், ஐ.எஸ்.ஐ. தூண்டுதலால் மசூத் அசாத் மீண்டும் வெளிப்படையாக நடமாட தொடங்கியிருப்பது, இந்தியாவுக்கு சவாலாகவே பார்க்கப்படுகிறது. விரைவில் மசூத் அசாத் தொடர்பாக ஒரு பெரிய செய்தி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
