உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அங்கு, பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு, அந்த வழியாக தற்செயலாக வந்த ராணுவ டாக்டர் ஒருவர், தனது தலையில் இருந்த ஹேர் கிளிப் மற்றும் கைப்பையில் இருந்த ஒரு கத்தி ஆகியவற்றை வைத்து, ரயில்வே பிளாட்பாரத்திலேயே பிரசவம் பார்த்துள்ளார்.
ஒரு கர்ப்பிணி பெண் ரயிலில் பயணம் செய்வதற்காக பிளாட்பாரத்தில் காத்திருந்தபோது, திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பெண் டிக்கெட் பரிசோதகர் மற்றும் அவர் அருகில் இருந்த ராணுவ அதிகாரி ஒருவர் உடனடியாக செயல்பட்டு, அந்த பெண்ணுக்கு உதவ முன்வந்தனர்.
ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் பணிபுரியும் மருத்துவ அதிகாரி டாக்டர் ரோஹித் பச்வாலா, தனது ரயிலுக்காகக் காத்திருந்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது. நிலைமையின் தீவிரத்தை புரிந்துகொண்ட அவர், உடனடியாக ரயில்வே ஊழியர்களின் உதவியுடன், பிளாட்பாரத்திலேயே குழந்தையை பிரசவிக்க முடிவு செய்தார். அவரிடம் முறையான அறுவை சிகிச்சை உபகரணங்கள் இல்லாவிட்டாலும், தன்னிடம் இருந்த கருவிகளை வைத்து அவர் மிகவும் சாதுரியமாக அந்தப் பிரசவத்தைச் செய்தார்.
தொப்புள் கொடியை கிளாம்ப் செய்ய ஒரு ஹேர் கிளிப்பை பயன்படுத்தினார். குழந்தை வெளியே வந்த பிறகு, தொப்புள் கொடியை வெட்டுவதற்கு தன்னுடைய கைப்பையில் இருந்த சிறிய கத்தியை அவர் பயன்படுத்தினார்.
பிரசவ வலியால் துடித்து கொண்டிருந்த அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வரை அவர் தாங்க மாட்டார் என்பதால், நேரத்தை வீணாக்க விரும்பாமல் ரயில்வே பிளாட்பாரத்திலேயே அவருக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்ததாகவும் அந்த ராணுவ டாக்டர் தெரிவித்துள்ளார்.
தற்போது ஆம்புலன்ஸ் மூலம் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் சேய் இருவரும் நலமாக இருப்பதாகவும், தனக்கு பிளாட்பாரத்திலேயே பிரசவம் பார்த்த அந்த ராணுவ டாக்டருக்கு தனது நன்றியைத் தெரிவித்து கொண்டதாகவும் கூறப்பட்டு வருகிறது.
“மருத்துவர்கள் எந்த சூழ்நிலையிலும் சிகிச்சை அளிக்க தயாராக இருக்க வேண்டும் என்பதை இன்றைய நிகழ்வில் இருந்து புரிந்து கொண்டேன்,” என்று ராணுவ டாக்டர் செய்தியாளர்களிடம் கூறினார். “என்னால் இரண்டு உயிர்களைக் காப்பாற்ற முடிந்தது என்பது எனக்கு இறைவன் கொடுத்த ஒரு வரமாக கருதுகிறேன்,” என்றும் அவர் மேலும் கூறினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
