கூகுள் சர்ச்சில் முதலில் வரும் தகவல் உண்மையானதா? விரிவான ஒரு பார்வை..!

Published:

நாம் ஒரு விஷயத்தை கூகுளில் தேடினால் அதில் வரும் தகவல்களில் முதலில் இருக்கும் தகவல் தான் உண்மை என்று பலரும் நம்பி அதை கிளிக் செய்து அதை பின்பற்றுகின்றனர். ஆனால் முதலில் வரும் தகவல் உண்மையானதா? அல்லது பொய்யானதா? என்றால் இரண்டும் சாத்தியம் இல்லை என்று தான் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கூகுளில் ஒரு விஷயத்தை தேடும்போது முதலில் ஒரு லிங்க் வருகிறது என்றால் அதற்கு அது சரியான தகவல் அல்லது உண்மையான தகவல் என்ற அர்த்தம் கிடையாது. கூகுள் அல்காரிதம் உள்பட சில காரணங்களால் அதிக நபர்களால் படிக்கப்பட்டதால் முதலிடம் பெற்றதை தவிர அந்த தகவல் உண்மையானது, நம்பகமானது என்பதற்கு முழு உத்தரவாதம் கிடையாது.

கூகுள் என்பது ஒரு சியர்ச் எஞ்சின். அது நாம் தேடும் ஒரு விஷயத்தை தயாரித்து கொடுக்காது, ஏற்கனவே இணையதளங்களில் உள்ளவற்றை தான் எடுத்து கொடுக்கும். அதில் எது சரியானது என்பதை நாம் தான் தேர்வு செய்ய வேண்டுமே தவிர கூகுள் அதற்கு பொறுப்பு எடுத்துக் கொள்ளாது.

ஒரு விஷயத்தை நாம் தேடும்போது அதனுடைய அடிப்படை உண்மை தன்மையை புரிந்து கொண்டு தேட வேண்டும். ஒரே தலைப்பில் கூகுள் பல தகவல்களை அனுப்பினாலும் அதில் எது சரியானதாக இருக்கும் என்று இனம் கண்டு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு நமக்கு அடிப்படை அறிவு இருக்க வேண்டும். அப்போதுதான் உண்மையான தகவல்களை நாம் பெற்றுக் கொள்ள முடியும் .

உதாரணமாக நாம் ஒரு முகவரியை சிலரிடம் கேட்டால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான பதிலை சொல்வார்கள். அது போல் தான் கூகுளிடம் ஒரு விஷயத்தை நாம் கேட்டோம் என்றால் பல்வேறு இணையதளங்கள் உள்ள செய்திகளை திரட்டி நமக்காக அளிக்கும். அதில் எது உண்மை தன்மை உள்ளது, எது நம்பகமானது, எது பொய் என்பதை நாம் தான் பிரிக்க தெரியும் அளவுக்கு அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

யார் வேண்டுமானாலும் இணையதளங்களை தொடங்கி அதில் செய்திகளை பதிவு செய்யலாம் என்று நடைமுறை இருக்கும் நிலையில் உண்மையான செய்தி எது, பொய் செய்தி எது, மோசடி விளம்பரம் எது என்பதை நாம் தான் பகுத்து அறிந்து தேடுதளத்தில் இருந்து சரியானவற்றை தேர்வு செய்ய வேண்டும். மொத்தத்தில் கூகுளை முழுவதுமாக நம்பவும் கூடாது, அதே சமயத்தில் கூகுள் தரும் தகவல் எல்லாமே பொய்யானது என்று நிராகரிக்கவும் கூடாது.

மேலும் உங்களுக்காக...