கூகுள் தனது பிரபலமான இணைய பிரவுசர் குரோமை விற்பனை செய்யப் போகிறதா? என்ற கேள்வியை சுற்றி சமீபத்தில் பல சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. சில வழக்குகளால் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், பலரும் இது குறித்து ஆழமான சந்தேகங்களை தெரிவித்து வருகின்றனர். இதே நேரத்தில், சில நிறுவனங்கள் குரோமை வாங்க தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த சூழலில், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, இந்த வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். அவரது சமீபத்திய பேட்டியில் இதற்குரிய விளக்கம் அளித்துள்ளார்.
“கூகுள் குரோமை விற்கும் நிலைக்கு சென்றால், நாம் எதை செய்ய விரும்புகிறோமோ அதை செய்ய முடியும் என உங்களுக்குத் தோன்றுகிறதா?” என்று கேட்டபோது, பிச்சை நேரடியாக ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதிலை அளிக்கவில்லை. ஆனால், கூகுள் குரோமை விற்கும் திட்டம் ஏதுமில்லை என்பதை குறிப்பாக எடுத்து காட்டினார். “அந்த மாதிரியான நிலை எனக்கு தோன்றவில்லை,” என்றார் அவர்.
பின்னர், குரோமை உருவாக்கியதில் தன்னுடைய பங்கு மற்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் விளக்கினார்.
“நான் நேரடியாக குரோம் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தேன். நாங்கள் எங்கள் தயாரிப்பு மட்டுமல்ல, இணையத்தின் முன்னேற்றத்தையே மேம்படுத்தினோம். அதை open-source ஆக மாற்றினோம், ‘க்ரோமியம்’ என்ற பிளாட்பாரத்தை வழங்கினோம், மேலும் பாதுகாப்பு மற்றும் புதுமைக்கு பெரிதும் முதலீடு செய்தோம்.”
மேலும், Microsoft Edge, Brave போன்ற பிற பிரவுசர்கள் கூகுளின் Chromium பிளாட்பாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, குரோம் மீது எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும், அதன் தாக்கம் அதிகமாக உள்ளது என்றார்.
“எந்தச் சூழ்நிலையிலும், நாங்கள் முதலீடு செய்யவும், புதுமை கொண்டு வரவும், வெற்றிகரமான வணிகம் உருவாக்கவும் தொடர்வோமே தவிர குரோமை விற்கும் எண்ணம் இல்லை என்று சுந்தர் பிச்சை கூறினார்.
இதனால் தற்போது, கூகுள் குரோமை விற்கும் எந்தத் திட்டமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.