இகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான பிளிப்கார்ட் தனது கிளை நிறுவனங்களில் ஒன்றை மூடி, அதில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களையும் வேலைநீக்கம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இகாமர்ஸ் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ஏஎன்எஸ் காமர்ஸ் என்ற நிறுவனம், 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தங்கள் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் விற்க விரும்பும் நிறுவனங்களுக்கு சந்தைப்படுத்துதலுக்கு இந்நிறுவனம் உதவியாக இருந்தது. இந்த நிறுவனத்தை 2022 ஆம் ஆண்டு பிளிப்கார்ட் கையகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லாத காரணத்தால், பிளிப்கார்ட் அதை மூட முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக, ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒட்டுமொத்த பணியாளர்களும் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், பிளிப்கார்ட் நிறுவனத்தில் தேவையான அளவு அந்த ஊழியர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு ஏற்படும் இழப்பை குறைப்பதற்காக, பிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு வழங்க இயன்றவரை செய்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. இதனால், ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஏஎன்எஸ் காமர்ஸ் நிறுவனத்தை 2022 ஆம் ஆண்டு பிளிப்கார்ட் வாங்கிய நிலையில், மூன்றே ஆண்டுகளில் அதை மூட முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.