மாமனாருக்கு அவ்வளவு வெறி.. மருமகளை கொலை செய்து குழியில் புதைத்த மாமனார்.. ஒரு உண்மையான ‘த்ரிஷ்யம்’ சம்பவம்..!

  ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 24 வயது நிரம்பிய தனு சிங் என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது மாமனாரால் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல் கணவரின்…

murder1

 

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் 24 வயது நிரம்பிய தனு சிங் என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்டு, அவரது மாமனாரால் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவரது உடல் கணவரின் வீட்டின் முன் இருந்த குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூர செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் உள்ள ஷிகோஹாபாத்தை சேர்ந்த தனு, ஃபரிதாபாத்தின் ரோஷன் நகரை சேர்ந்த அருண் சிங்கை திருமணம் செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை தனு சிங் குடும்ப வீட்டிற்கு வெளியே உள்ள ஒரு பொதுப் பாதையில் தோண்டப்பட்ட 10 அடி ஆழமான குழியிலிருந்து அவரது அழுகிய உடல் மீட்கப்பட்டது. தனு காணாமல் போன சில நாட்களுக்குப் பிறகு, அந்த குழிக்கு மேல் புதிதாக ஒரு கான்கிரீட் தளம் போடப்பட்டிருந்தது. அதன் அடியில்தான் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

தனுவின் மாமனாரான பூப் சிங், காவல்துறையின் விசாரணையின்போது இந்த கொலையை ஒப்புக்கொண்டுள்ளார். காவல்துறையின் விசாரணையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி இரவில், பூப் சிங், தனது மனைவி சோனியா மற்றும் மகன் அருண் ஆகியோர் இல்லாத நேரத்தில், வீட்டின் முதல் தளத்தில் தனுவின் கழுத்தை நெரித்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர், தண்ணீர் வடிகாலுக்காக ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த ஒரு குழியில் உடலை மறைத்துள்ளார். கிட்டத்தட்ட ‘த்ரிஷ்யம்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் நடந்துள்ளது.

“குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கும் இந்த கொலையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து நாங்கள் தற்போது விசாரித்து வருகிறோம். இந்த கொலையின் பின்னணியில் வரதட்சணை கொடுமை காரணமாக இருக்கலாம் என்று தெரிகிறது, எனினும் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,” என்று உதவி ஆணையர் ராஜேஷ் குமார் லோச்சன் தெரிவித்தார்.

கொலை நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்திற்குப் பிறகு, பூப் சிங், ஏப்ரல் 25 அன்று தனு காணாமல் போனதாக காவல்துறையில் ஒரு புகார் கொடுத்திருக்கிறார். அதன்பிறகு பல வாரங்களாக தனு கிடைக்கவில்லை. தனுவின் சகோதரி ப்ரீத்தி, தன் சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொள்ள எவ்வளவோ முயன்றும் பதில் கிடைக்காததால் சந்தேகம் வலுத்துள்ளது.

தனது சகோதரிக்கு திருமணம் ஆன ஆரம்ப நாட்களிலிருந்தே வரதட்சணை கொடுமைகள் இருந்து வந்ததாக ப்ரீத்தி வேதனையுடன் கூறினார். “திருமணம் ஆன சில மாதங்களிலேயே தனு எங்களது தாய் வீட்டில் வந்து தங்கினாள். காரணம், அங்கே அவளை சரியாக நடத்தவில்லை. அவள் எங்களுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கினாள். இறுதியாக நாங்கள் அவளைத் திரும்ப அனுப்பியபோது, சித்திரவதை மீண்டும் தொடங்கியது. அவர்கள் எங்களை அவளுடன் பேசக்கூட அனுமதிக்கவில்லை, தொலைபேசி அழைப்புகளிலும் பேசவிடவில்லை.” என்று தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 23 அன்று, தனுவின் அண்டை வீட்டார் தங்கள் வீட்டிற்கு வெளியே ஒரு மண் அள்ளும் இயந்திரம் வந்ததை பார்த்ததாகக் கூறுகின்றனர். அருண் சிங் மற்றும் பூப் சிங் ஆகியோரால் வடிகால் அமைக்கும் பணி என்று கூறி, சுமார் 10 அடி ஆழமுள்ள ஒரு குழி தோண்டப்பட்டது. இரண்டு நாட்களுக்கு பிறகு, ஏப்ரல் 25 அன்று, பூப் சிங், தனு காணாமல் போனது குறித்து காவல்துறையில் புகார் அளிக்க சென்றது மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

தனுவின் உடல், மரணத்திற்கான சரியான நேரம் மற்றும் காரணத்தை தீர்மானிக்க தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பூப் சிங், அவரது மனைவி சோனியா, மகன் அருண், மற்றும் மகள் காஜல் ஆகிய நால்வர் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தக் கொலை நடந்ததாக கூறப்படும் நேரத்தில் காஜல் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் இருந்தனர். அவர்களில் எவருக்கும் இந்த கொலை குறித்து முன்னரே தெரிந்திருந்ததா அல்லது இதில் அவர்களுக்கு தொடர்பு இருந்ததா என்பது குறித்து காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

வரதட்சணை வாங்குவது குற்றம் என சட்டம் இருந்தும், இன்னும் அது நடைமுறையில் மக்களால் பின்பற்றப்படுவதில்லை. பொதுவாக மாமியார் தான் மருமகளுக்கு வரதட்சணை கொடுமை செய்வார் என்று கேள்பட்டதுண்டு. ஆனால் இந்த வழக்கில் மாமனார் வரதட்சணை வெறியால் மருமகளை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.