2 வயது மகளுடன் வேலை செய்யும் உணவு டெலிவரி ஊழியர்.. பலரையும் கண்கலங்க வெச்ச பின்னணி..

By Ajith V

Published:

இந்திய காலத்தில் நாம் சிரித்த முகத்துடன் கடந்து செல்லும் பலரது வாழ்விற்கு பின்னரும் நிறைய சோகமான அல்லது யாரிடமும் பகிர கூட முடியாத அளவிற்கான பாரங்களும், சுமைகளும் ஏராளமாக இருக்கும். அதை எங்கேயும் காட்டிக் கொள்ளாமல் அந்த வலிகள் அனைத்தையும் மனதிலேயே வைத்து எப்படியாவது ஒரு நாளில் அனைத்தும் மாறி சரியாகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் ஓடிக்கொண்டே இருப்பார்கள்.

இதே போல, நகர பகுதிகளில் நாள்தோறும் நிறைய டெலிவரி ஊழியர்கள் வெயிலையும் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் கடினமாக உழைக்க வேண்டுமென்ற ஓடிக் கொண்டே இருப்பார்கள். இதை பார்க்கும் போது நம் மனதில் இவர்கள் பணத்திற்காக ஓடுவது போல தோன்றலாம். ஆனால், அதை எல்லாம் தாண்டி பிடித்த வேலை கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தில் கிடைத்த வேலையை வைத்து கனவை அடையலாம் என வேகமாக ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

இன்னொரு பக்கம், வேறு நல்ல வேலையில் இருந்தும் குடும்ப சூழல் காரணமாக இரவு, பகல் பாராமல் அதிக நேரம் உழைக்கும் மக்களும் இங்கே நிறைய பேர் உள்ளனர். இப்படி டெலிவரி ஊழியர்களுக்கு பின்னால் கூட நமக்கு தெரியாத நிறைய கதைகள் உள்ளது.

அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் ஒரு இளம் டெலிவரி ஊழியர் தனது 2 வயது மகளுடன் டெலிவரிக்கு சென்ற சம்பவமும், அதற்கு பின்னால் உள்ள காரணமும் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது. தேவேந்திர மெஹ்ரா என்ற ஸ்டார்பக்ஸ் ஊழியர் ஒருவர், தனது நிறுவனத்தில் ஆர்டர் வாங்க வந்த உணவு டெலிவரி ஊழியர் ஒருவரை கவனித்துள்ளார்.

அப்போது அவர் 2 வயது மகளுடன் வந்தது பற்றி உணர்வுப் பூர்வமான கருத்துக்களையும் தேவேந்திர மெஹ்ரா பகிர்ந்துள்ளார். “டெல்லியின் கான் மார்க்கெட்டில் உள்ள ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு ஆர்டர் எடுப்பதற்காக வந்தார். அவரது குணம் எங்கள் மனதை தொட்டு விட்டது. வீட்டில் உள்ள சவால்களுக்கு மத்தியில் அவர் தனது இரண்டு வயது 2 மகளுடன் பணிபுரிந்து வருகிறார்.

அவரது மனைவி அருகே இல்லாததால் கடினமாக உழைக்க வேண்டும் என்ற நோக்கில் தந்தை மட்டுமே இருக்கும் மகளையும் கவனமாக பார்த்து வருகிறார். அவரது மகளுக்காக அவர் காண்பிக்கும் அர்ப்பணிப்பும், அன்பும் எங்களை மெய்சிலிர்க்க வைத்தது” என குறிப்பிட்டுள்ளார். மேலும், கடினமான நேரத்தில் இப்படி உழைக்கும் மனிதர்கள் அற்புதமானவர்கள் என்றும் குறிப்பிட, அவரது மகளும் வருங்காலத்தில் உயரமான இடத்திற்கு வர வேண்டுமென பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...