ஆர்டர் செஞ்சது 2022ல.. குக்கர் வந்தது 2024ல.. வாடிக்கையாளரையே மிரள வெச்ச டெலிவரி நிறுவனம்..

Published:

முன்பெல்லாம் நாம் கடை கடையாக தேடி நமக்கு வேண்டப்பட்ட பொருள்களை வாங்கிக் கொள்வோம். உதாரணத்திற்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வேண்டுமென்றால் பல மணி நேரம் சூப்பர் மார்க்கெட்டில் அலைந்து திரிந்து அதிக நேரம் செலவு செய்து பல பொருட்களையும் நாம் சொந்தமாக்கிக் கொள்வோம். ஆனால் அதே வேளையில் தற்போதைய காலத்தில் வளர்ச்சியின் காரணமாக, ஆன்லைன் மூலம் நாம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட பல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலம் நமக்கு வேண்டப்பட்ட பொருட்களை மிக நிதானமாக போன் மூலமாக தேடி ஆர்டர் செய்து கொண்டால் ஒரு சில தினங்களில் நம் வீட்டிற்கு நம்மை தேடி வந்து விடும். இதில் மற்ற வாடிக்கையாளர்களின் பயன்பாடு எந்த அளவுக்கு இருந்தது என்பது பற்றிய தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இதனால் ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்கிக் கொள்வது மக்கள் மத்தியில் அதிக கவனத்தையும் பெற்று வருகிறது. ஆனால் அதே வேளையில் ஆன்லைன் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் போது சில சிக்கல்கள் எழாமல் இல்லை. உதாரணத்திற்கு நாம் செல்போனை ஆர்டர் செய்யும் பட்சத்தில் அதில் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் அல்லது வேறு பொருள்கள் கூட மாறி வரலாம்.

இன்னொரு பக்கம் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக கற்கள் வந்த சம்பவங்கள் கூட சில முன்னணி டெலிவரி நிறுவனங்களில் நடந்ததுண்டு. இதன் பின்னர் அது பற்றி புகாரளித்து நாம் ஆர்டர் செய்த பொருளை வாங்குவதற்குள் ஒருவழி ஆகிவிடுவோம். இதற்கு ஆன்லைனில் ஆர்டர் செய்யாமல் நேரடியாக கடைக்கு சென்று வாங்கி விடலாம் என்று விரக்தி நிலை கூட தோன்றும்.

அப்படி இருக்கையில் தற்போதும் ஆன்லைன் டெலிவரி குளறுபடி ஒன்று நடந்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஜெய் என்ற நபர் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் அதன்படி அவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பிரஷர் குக்கர் ஒன்றை அமேசானில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் பின்னர் சில காரணங்களால் அந்த ஆர்டரை அவர் கேன்சல் செய்ய பணமும் திரும்ப பெறப்பட்டுள்ளது.

ஆர்டரை கேன்சல் செய்து விட்டதால் அதைப் பற்றி யோசிக்காமல் இருந்த ஜெய் என்ற நபருக்கு கடந்த சில தினங்கள் முன்பாக ஆர்டர் செய்து கேன்சல் செய்த பிரஷர் குக்கர் சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து வந்து சேர்ந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஜெய், ‘இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த குக்கரை அனுப்பி வைத்ததற்கு நன்றி. இத்தனை நாட்கள் கழிந்து வருகிறது என்றால் நிச்சயமாக ஸ்பெஷலான பிரஷர் குக்கராக தான் இருக்கும்’ என்றும் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு தொடர்பாக இணையவாசிகள் பலரும் பலவிதமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...