கிரெடிட் கார்டு என்பது தேவையான பொழுது செலவு செய்து, அதன் பின் அந்த பணத்தை குறிப்பிட்ட நாளில் செலுத்தி விட்டால் வட்டி இல்லை என்றும் அவ்வாறு செலுத்தாவிட்டால் அதிக வட்டியுடன் கட்ட வேண்டும் என்பதால் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கிரெடிட் கார்டுகளில் வாங்கும் கடனை சரியான நேரத்தில் செலுத்தாவிட்டால் 30 சதவீதத்திற்கும் அதிகமான வட்டி செலுத்த வேண்டிய நிலை இருப்பதால் பயனாளர்கள் பணம் வீணாகிறது.
இந்த நிலையில் இதனை கணக்கில் கொண்டு UPI தற்போது கிரெடிட் கார்டு போலவே கடன் கொடுக்கும் ஒரு புதிய வசதியை ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட UPI தற்போது ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு முதல் கட்டமாக இந்த கடன் சேவையை வழங்க உதவுகிறது.
பொதுவாக UPI மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் போது நம்முடைய அக்கவுண்டில் உள்ள பணம் கழிக்கப்படும், ஆனால் தற்போது இந்த கிரெடிட் லைன் அம்சம் மூலம் பயனர்கள் உடனடியாக தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை செலுத்தாமல் ஒரு குறிப்பிட்ட நாள் வரை கால அவகாசம் எடுத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இதற்கு வட்டியும் மிகவும் குறைவு.
கிரெடிட் கார்டு போல் அநியாயமாக 30 சதவீதத்திற்கு மேல் வட்டி பெறாமல் மிகக்குறைந்த வட்டிக்கு UPI மூலம் இந்த வசதி தொடங்கப்படவுள்ளதை அடுத்து வாடிக்கையாளர்கள் வாங்கும் திறன் மற்றும் நிதி சுழற்சி அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகர்களிடம் ஷாப்பிங் செய்யும்போது பயமில்லாமல் கிரெடிட் கார்டுக்கு பதிலாக UPI கடன் வசதி மூலம் ஷாப்பிங் செய்யலாம் என்றும் மிகக் குறைந்த வட்டி தான் என்றும் அதுமட்டுமின்றி கடன் வழங்கப்பட்ட தொகைக்கு எத்தனை நாள் என்று கணக்கு போட்டு வட்டி வாங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்களை அதிகரிக்கும் வகையில் இந்த புதிய வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள நிலையில் இது விரைவில் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.