தீராத விளையாட்டு பிள்ளை.. 650 ஏக்கரில் விளையாட்டு மையம்.. பட்ஜெட் ரூ.6000 கோடி.. காமன்வெல்த் போட்டிக்கு தயாராகிறது இந்தியா..!

  காந்திநகரில் உள்ள குஜராத் தலைமை செயலகத்தில் ஒவ்வொரு வாரமும் ரகசியமாக கூடும் உயர்மட்ட அதிகாரிகள், ஒரே ஒரு நோக்கத்திற்காக சந்தித்து வருகின்றனர்: அது விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு. இதற்கான காலக்கெடு, டெண்டர்கள், மனிதவள…

cwg

 

காந்திநகரில் உள்ள குஜராத் தலைமை செயலகத்தில் ஒவ்வொரு வாரமும் ரகசியமாக கூடும் உயர்மட்ட அதிகாரிகள், ஒரே ஒரு நோக்கத்திற்காக சந்தித்து வருகின்றனர்: அது விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாடு. இதற்கான காலக்கெடு, டெண்டர்கள், மனிதவள பற்றாக்குறை என அனைத்தும் விரிவாக விவாதிக்கப்படுகின்றன. மிகப்பெரிய திட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த மாத தொடக்கத்தில், 2030 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த குஜராத்தில் இருந்து ஒரு உயர்மட்ட குழு லண்டனுக்கு பறந்தது. இது ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்துவதற்கான ஒரு படி மட்டுமல்ல, அகமதாபாத் மற்றும் காந்திநகரை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாற்றுவதற்கான ஒரு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மாநில விளையாட்டு செயலாளரின் தலைமையில் நடைபெறும் வாராந்திர ஆய்வு கூட்டங்களில், குஜராத் விளையாட்டு ஆணையம், மாநகராட்சி மற்றும் குஜராத் விளையாட்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மூத்த அதிகாரிகள், கட்டுமானத்தில் உள்ள மைதானங்களின் முன்னேற்றம் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.

“டெண்டர்கள், காலக்கெடு, ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து எங்களிடம் கேட்கப்படுகிறது. ஏதாவது சந்தேகம் என்றால் உடனடியாக அங்கேயே தீர்க்கப்படுகிறது,” என்று மாற்றுத்திறனாளிகளுக்கான உயர் செயல்திறன் மையம் மற்றும் விளையாட்டு கிளப்புகள் போன்ற திட்டங்களில் பணிபுரியும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

“இது இனி 9 முதல் 5 மணி வேலை அல்ல, நாங்கள் தொடர்ந்து 11-12 மணிநேரம் பணிபுரிகிறோம். ஆனால் அது பலன் தருகிறது. பல திட்டங்கள் தங்கள் இலக்குகளை அடைந்து வருகின்றன.” என்று குஜராத் விளையாட்டு ஆணையத்தின் மற்றொரு அதிகாரி கூறினார்.

நாரன்புரா விளையாட்டு வளாகம், மாற்றுத்திறனாளிகளுக்கான உயர் செயல்திறன் மையம் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகம் போன்ற திட்டங்களுடன், இந்த நகரம் வெறும் விளையாட்டு அரங்கங்களை மட்டும் கட்டவில்லை. டெல்லி மற்றும் மும்பையை பெரிய விளையாட்டு நிகழ்வுகளிலிருந்து தனிமைப்படுத்தி, அகமதாபாத்தை மையமாக்கும் பெரிய திட்டத்தையும் கொண்டுள்ளது.

அகமதாபாத் ஆசிய நீர்வாழ் விளையாட்டு மற்றும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2025ஆம் ஆண்டிலும் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2026ஆம் ஆண்டிலும் மற்றும் U20 உலக தடகள சாம்பியன்ஷிப் 2028 ஆம் ஆண்டிலும் நடத்த ஆர்வமாக உள்ளது. ஏற்கனவே உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஏற்கனவே இங்கு தான் உள்ளது. இங்கு ஐசிசி உலகக் கோப்பை இறுதிப் போட்டி மட்டுமல்லாமல், கோல்ட்ப்ளே இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி போன்ற கச்சேரிகளும் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேட்டி சாட்லெயர், அகமதாபாத் உட்பட இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்தியாவின் விளையாட்டு உள்கட்டமைப்பு பணிகளை அவர் பாராட்டினார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தகுதியான நாடு தான் இந்தியா என்றும் அவர் கூறினார்.

அகமதாபாத்தில் அமைக்கப்பட இருக்கும் விளையாட்டு வளாகத்தில் நிரந்தர மற்றும் தற்காலிக விளையாட்டு அரங்கங்கள் இடம்பெறும். அவை: 15,000 இருக்கைகள் கொண்ட உட்புற அரங்கம், 12,000 இருக்கைகள் கொண்ட நீச்சல் மையம், 10,000 இருக்கைகள் கொண்ட கைப்பந்து மைதானம், 6,000 இருக்கைகள் கொண்ட கூடைப்பந்து அரங்கம், விளையாட்டு வீரர்களுக்கான தங்குமிடங்கள். மேலும், இங்கு ஹோட்டல்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், பொழுதுபோக்கு மண்டலங்கள், உணவு விடுதிகள் மற்றும் நிர்வாக அலுவலகங்களும் இருக்கும்.

650 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள சர்தார் வல்லபாய் படேல் விளையாட்டு வளாகத்திற்கு சுமார் ₹6,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை நடத்த இந்தியா, கனடா, நைஜீரியா உள்ளிட்ட சில நாடுகள் போட்டி போடுகின்றன. ஆனால் இந்தியா அல்லது கனடாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பாக இந்தியாவுக்கு கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.