“சின்ன பொறிதான்… ஆனா பத்திக்கிச்சுன்னா மொத்த காட்டையும் சாம்பலாக்கிடும்! வயசைப் பார்க்காதே… நான் வைக்கப்போற ஆப்பப் பாரு!” என்ற இந்த அதிரடி முழக்கம் இன்று தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. காலங்காலமாக “அரசியல்னா அது வயசானவங்களுக்கான களம்” என்ற எழுதப்படாத விதியை உடைத்தெறியும் துணிச்சலோடு களமிறங்கியிருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். அனுபவம் என்கிற பெயரில் தேங்கிப்போன பழைய அரசியலை விட, துடிப்பும் நேர்மையும் கொண்ட இளைய தலைமுறையால் மட்டுமே சமூகத்தில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்பதை முதல்வர் விஜய் மிக ஆழமாக நம்புகிறார். இந்த இளமைப் பொறிதான் நாளை ஒட்டுமொத்த ஊழல் காட்டையும் பொசுக்கப்போகும் பெருநெருப்பாக உருவெடுத்துள்ளது.
இளமை என்பது வெறும் பருவம் அல்ல, அதுதான் சாதனைகளின் பிறப்பிடம் என்பதை உலகம் பலமுறை நிரூபித்துள்ளது. விளையாட்டுத் துறையை எடுத்துக்கொண்டால், வெறும் 15 வயதிலேயே மைதானத்திற்குள் நுழைந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார் சச்சின் டெண்டுல்கர்; அண்மையில் வெறும் 14 வயதிலேயே கிரிக்கெட் உலகை வியக்க வைத்த வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் திறமைகள் உலக சாதனை படைக்கவில்லையா? விளையாட்டுக்கு இருக்கும் இந்த விதி அரசியலுக்கும் பொருந்தும். அதேபோல் தான், இன்று நடக்கும் முதல்வர் விஜய் ஆட்சியில் இளம் அமைச்சர்களும் தங்களின் அசாத்திய திறமையாலும், அர்ப்பணிப்பாலும் மக்கள் போற்றும் வகையில் சாதனை படைப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
வயதானவர்கள், அனுபவம் மிக்கவர்கள் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த பழம் தின்னு கொட்டை போட்ட பழைய அமைச்சர்கள் எல்லாம் இதுவரை இந்த நாட்டுக்கு என்ன செய்தார்கள் என்ற நியாயமான கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பத்து ரூபாய் செலவில் கட்டி முடிக்க வேண்டிய ஒரு பாலத்தை, இருபது ரூபாய்க்கு மதிப்பீடு தயாரித்து மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பெருமைதான் இந்த “அனுபவ” அரசியல்வாதிகளுக்கு உண்டு. அப்படி ஊழல் செய்து சேர்த்த பணத்தோடு நிம்மதியாக வாழ முடியாமல், இன்றைக்கு அவர்கள் ஒவ்வொருவரும் போலீஸ் நிலையம், நீதிமன்றம் என்று கேஸும் கையுமாக அலைந்து கொண்டிருப்பதை ஒட்டுமொத்த தமிழகமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
எனவே, இனிவரும் காலங்களில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கும்போது சின்ன வயசு, பெரிய வயசு என்று வயதை ஒரு தகுதியாகப் பார்க்கக் கூடாது. அவர் நேர்மையானவரா? ஒழுக்கமானவரா? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவரா என்று மட்டுமே பார்க்க வேண்டும். எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தோம் என்பது முக்கியமல்ல, இருந்த காலத்தில் மக்களுக்கு எவ்வளவு உண்மையாக இருந்தோம் என்பதுதான் முக்கியம். நேர்மையும் ஒழுக்கமும் இல்லாத எத்தனை பெரிய அனுபவமும் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் தராது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்.
முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியில் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் பெரும்பாலும் வயது குறைந்த இளம் தலைமுறையினராகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் சின்னவர்களாக இருந்தாலும், எவராலும் விலை பேச முடியாத மிகச்சிறந்த நல்லவர்களாகவும், மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். புதிய சிந்தனைகளும், நவீனத் தொழில்நுட்ப அறிவும் கொண்ட இந்த இளைஞர்கள், நிர்வாகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள். இவர்களின் கைகளில் அதிகாரம் கிடைக்கும்போது, தமிழகத்தின் தரம் சர்வதேச அளவிற்கு உயரும் என்பது உறுதி.
முடிவாக, “கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது” என்ற பழமொழிக்கு ஏற்ப, இந்த இளம் அமைச்சர்களின் வேகம் ஊழல்வாதிகளின் அடிமடியை உலுக்கப்போகிறது. அனுபவம் என்ற பெயரில் நடக்கும் பகல் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்த இளமைப் படையால் மட்டுமே முடியும். தப்பு செய்யத் தெரியாத நேர்மையும், வளைந்து கொடுக்காத ஒழுக்கமும் கொண்ட இந்த புதிய தலைமுறை அமைச்சர்கள், முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலில் தமிழகத்திற்கு ஒரு நேர்மையான, தூய்மையான மற்றும் லஞ்சமற்ற பொற்கால ஆட்சியைத் தருவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
