எங்க ட்ரோனையே அழிச்சிட்டியா? சீனா தயாரிக்கும் “ஸ்மார்ட் ஸ்வார்ம்” ஹைப்பர்சோனிக் ட்ரோன்.. இந்தியாவுக்கு சவாலா?
இன்று ட்ரோன்கள் பெரிதும் பரவலாகிவிட்டன. உலகின் பெரும்பாலான நாடுகள் இவை பயன்படுத்தி வருகின்றன. ஆனால், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் என்பது உலகின் மிக சில நாடுகளிடம் மட்டும் தான் உள்ளது. காரணம், இது மிகவும் சிக்கலான தொழில்நுட்பம். எனினும், எதிர்காலத்தில் இது பொதுவான ஒன்றாகி விடும் என கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சீனா ஹைப்பர்சோனிக் ட்ரோன்களை உருவாக்கியுள்ளதாகவும், அவற்றை நெட்வொர்க் மூலம் இணைத்து “ஸ்மார்ட் ஸ்வார்ம்” எனப்படும் தொலைநுட்பத்துடன் பல ட்ரோன்களை இணைக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த திட்டம், அமெரிக்காவின் சவால்களை எதிர்கொள்வதற்காகவே தொடங்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஸ்மார்ட் ஸ்வார்ம் என்றால் என்ன? என்பதை தற்போது பார்ப்போம். சீனாவின் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களை உருவாக்கும் புதிய ஆய்வுகளின் போது, பல ட்ரோன்கள் ஒன்றோடொன்று இணைந்து ஒரே நேரத்தில் தாக்கும் வகையில் உருவாக்கப்படும் தொழில்நுட்பமே “ஸ்வார்ம்”. சீன தொழில்நுட்ப நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்த ஸ்மார்ட் ஸ்வார்ம் பற்றிய விவரம் இடம்பெற்றுள்ளது.
ஹைப்பர்சோனிக் UCAV-கள் (Unmanned Combat Air Vehicles) ஒவ்வொன்றும் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகத்தில் பறக்கக்கூடியவை. அவற்றை ஒரே நெட்வொர்க் மூலம் இணைத்து ஒரு ஸ்வார்ம் உருவாக்கப்படும். இது சாதாரண ஏவுகணைக்கு விட மிக அதிக ஆபத்தானது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளைவிட இது மெதுவாகவே இருந்தாலும், தாழ்வான உயரத்தில் பறக்கும் திறனால், ரேடார் போன்ற அமைப்புகளுக்கு பிடிபடுவது கடினம். இதில் அணுஅயுதங்களையும் ஏவ முடியும் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்காவும் 2017ஆம் ஆண்டு இதேபோன்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியது. இதற்கு MSET (Missile Multiple Simultaneous Engagement Technology) என பெயரிட்டனர். இதில் ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பயன்படுத்தி பல இடங்களை இலக்காக எடுத்துக்கொள்ள முடியும்.
ஆனால், இது ஹைப்பர்சோனிக் ஏவுகணை அடிப்படையிலான திட்டமல்ல; tactical system என்ற அமைப்பை சேர்ந்தது. சீனா இதே மாதிரியான ஸ்வார்மை ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளுடன் உருவாக்க முயற்சிக்கிறது.
இந்தியா எதிர்கால போர்களுக்காக தொழில்நுட்ப ரீதியாகத் தயாராகிக் கொண்டு இருக்கிறது. இந்திய இராணுவமும் ஸ்வார்மிங் தொழில்நுட்பத்தை உருவாக்க தொடங்கியுள்ளது. HAL (ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ்) என்ற ஒரு நவீன நீண்டதூர CATS – Combat Air Team System என்ற திட்டத்தை உருவாக்கி வருகிறது.
இந்த திட்டத்தில் ஒரு போர் விமானத்திலிருந்து மூன்று விதமான ட்ரோன்கள் இயக்கப்படும்:
1. CATS Warrior
2. CATS Hunter
3. CATS Alpha
எனினும், சீனா தற்போது மேற்கொண்டு வரும் ஹைப்பர்சோனிக் ட்ரோன் நெட்வொர்க் மேம்பாட்டு வேலைகள், இந்தியாவிற்கு கவலையை ஏற்படுத்தக்கூடியவை என்பது மட்டும் உறுதி.
சமீபத்தில் பாகிஸ்தான் தாக்கிய சீனாவில் இருந்து வாங்கிய ட்ரோன்களை இந்தியா மிக எளிதில் அழித்துவிட்டது. அந்த ஆத்திரத்தில் தான் சீனா தற்போது ஹைப்பர்சோனிக் ட்ரோன்களில் கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
