சீனாவின் ஒரே ஒரு அதிரடி நடவடிக்கையின் காரணமாக, இந்தியாவில் உள்ள மின்சார கார் உற்பத்தி நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் உற்பத்தி உச்சத்தில் இருப்பதும், டாடா, மஹிந்திரா a உள்பட பல முன்னணி நிறுவனங்கள் மின்சார கார் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருவதும் தெரிந்தது.
இந்த நிலையில், மின்சார கார் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களில் மிகவும் முக்கியமானது காந்தங்கள். இந்த காந்தங்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியா இறக்குமதி செய்யும் காந்தங்களில் 90% சீனாவிலிருந்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், திடீரென சீனா அரிய உலோகங்கள் ஏற்றுமதியில் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள் நிலையில், அதில் காந்தங்களும் இடம்பெற்றுள்ளன. இதனால், இந்தியாவின் மின்சார கார் உற்பத்தி சீர்குலைந்துள்ளதாகவும், இந்த மாத இறுதியில் உற்பத்தியை நிறுத்தும் நிலை உருவாகலாம் என்றும் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், சீனா இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் அமெரிக்கா என்றும், அமெரிக்காவை கட்டுப்படுத்தவே அரிய உலோகங்களின் ஏற்றுமதியை சீனா நிறுத்தியுள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதன் தாக்கம் இந்தியாவிற்கு மிகப்பெரிய அளவில் உள்ளது.
வேறு நாடுகளிலிருந்து காந்தங்களை இறக்குமதி செய்தால் விலை அதிகமாகும். எனவே, உற்பத்தி செலவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, மஹிந்திரா உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் இந்த காந்த ஏற்றுமதி தடையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது சீனா–இந்திய உறவுகள் சரியில்லாத நிலையில் இருப்பதால், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தாமதமாகும் என கூறப்படுவதால், இந்திய வாகன தொழில் நிறுவனங்கள் கடும் கவலையில் உள்ளன.