தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் சர்வ சாதாரணமாக கிடைப்பதாகவும், போதைப்பொருள்கள் பெட்டிக்கடைகளில் கூட வாங்கலாம் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், தமிழ் திரை உலகில் போதைப்பொருள்கள் பயன்படுத்தும் நடிகர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தையாக இருந்ததாக நடிகர் கிருஷ்ணா ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், திரை உலகில் பலர் போதைக்கு அடிமையாகி இருப்பதாகவும், போதைக்காகவே சில பார்ட்டிகள் நடப்பதாகவும் கூறப்படுவது அதிர்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
ஸ்ரீகாந்த், கிருஷ்ணா கைதுக்குப் பிறகு, இன்னும் சில பிரபல நடிகர், நடிகைகள் சிக்குவார்கள் என்றும், அவர்கள் ‘கோட் வேர்ட்’ மூலம் போதைப்பொருள் வாங்கி பார்ட்டிகளில் பயன்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் இது குறித்து முழுமையாக விசாரித்தால், இன்னும் பல பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் சேனலில் இது குறித்து விரிவாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், திரையுலகில் மட்டுமல்லாமல் சமூகத்திலும் போதைப்பொருள் பரவ, நெல்சன் மற்றும் லோகேஷ் கனகராஜ் போன்ற பெரிய இயக்குநர்கள் ஒரு காரணம் என்றும் அவர் சாடியுள்ளார். தங்கள் படங்களில் போதைப்பொருளை எப்படி வாங்குவது, எப்படி பயன்படுத்துவது, போதைப்பொருள் பயன்படுத்துவதால் என்ன நடக்கும் என்பதை விலாவாரியாக காட்டி, இளைஞர்களைக் கெடுக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார்,
குறிப்பாக, கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தில், விஜய் சேதுபதி கதாபாத்திரம் போதைப்பொருளால் தான் வலிமையான சக்தியை பெறுவதாகக் காட்டுவதால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். “கொஞ்சம் கூட சமூக பொறுப்பில்லாமல் அனைத்து படங்களிலும் போதைப்பொருள் சம்பந்தப்பட்ட கதையை லோகேஷ் கனகராஜ் எடுக்கிறார்,” என்றும் அவர் சாடியுள்ளார். லோகேஷ் கனகராஜ் போன்ற பெரிய இயக்குநர்கள் ரஜினி, கமல், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்தில் தான் போதைப்பொருளை ஒரு கதையின் கருவாக வைத்திருக்கிறார். இதனால், கோடிக்கணக்கான மக்களிடம் அவர் சொல்லும் கருத்து சென்று சேருகிறது என்றும், இது அப்பட்டமான சமூக விரோதம் என்றும் பலர் செய்யாறு பாலுவின் வீடியோவுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
‘கோலமாவு கோகிலா’ என்ற ஒரு காமெடி படத்தில் போதைப்பொருள் தான் மைய கருத்து என்றும், நெல்சன் போன்ற இயக்குநர்களால் தான் சமூகமே சீரழிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுப்பழக்கத்தைவிட போதைப் பழக்கம் மிகவும் கொடூரமானது என்று சமூக ஆர்வலர்கள் கூறிவரும் நிலையில், போதைப்பொருள் ஒரு பக்கம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தமிழகத்தில் நிலைமை ஏற்பட்டுவிட்டது என்றும், அதேபோல் திரைப்படங்கள் மூலம் போதைப்பொருள் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருப்பதாக தவறான பாடம் கற்பிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. “நீங்கள் என்னதான் அந்த காட்சிகள் வரும்போது கீழே எச்சரிக்கை டைட்டில் போட்டாலும், அதை யாரும் பார்க்க மாட்டார்கள்; போதைப்பொருள் எப்படிப் பயன்படுத்துவது என்பதைத்தான் எல்லோரும் பார்ப்பார்கள்,” என்றும் சொல்லப்படுகிறது.
எனவே, திரையுலகினர் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் குறித்த விலாவாரியான காட்சிகளை படத்தில் வைத்து இளைய சமூகத்தினரை கெடுக்க வேண்டாம் என்றும், நல்ல கதை அம்சம் கொண்ட, மக்களுக்கு நல்ல கருத்துக்கள் சொல்லக்கூடிய வகையில் படம் எடுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதையெல்லாம் பெரிய இயக்குனர்கள் பொருட்படுத்துவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.