ஐந்து வருடங்களாக நான்காம் நிலை குடல் புற்றுநோயுடன் போராடி வந்த சமூக வலைத்தள நட்சத்திரமான யூட்டாவை சேர்ந்த டானர் மார்ட்டின், தனது 30வது வயதில் மரணமடைந்தார். அவரது மறைவு செய்தியை, அவர் இறப்பதற்கு முன் பதிவுசெய்திருந்த ஒரு காணொளி மூலம் அவரது மனைவி ஷே வ்ரைட், இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
அந்த காணொளியில், மார்ட்டின் தனது மரணம் குறித்து நேரடியாக கேமராவை பார்த்து பேசினார். தனது மகள் எமிலூ பிறந்து வெறும் 41 நாட்களே ஆன நிலையில், அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளியில் மார்ட்டின் கூறியதாவது: “ஏய், நான் தான் டானர். இதை நீங்கள் பார்த்து கொண்டிருக்கும் நேரத்தில், நான் இறந்திருப்பேன் என ஆரம்பித்து தனது மகள் எமிலூ பிறந்து வெறும் 41 நாட்களே ஆன நிலையில் மகளை விட்டு பிரிய போவதாக உருக்கமாக தெரிவித்தார்.
மேலும் “எனக்கு ஒரு அருமையான வாழ்க்கை இருந்தது. என்னுடைய மரணத் நானே அறிவிக்கும் இந்த காணொளியை உருவாக்க முடிவு செய்தேன். ஏனெனில், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு யாரோ ஒருவர் இப்படி செய்ததைப் பார்த்தேன். என்னுடைய எண்ணங்கள் அனைத்தையும் வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன்’
“ஆனால் நண்பர்களே, வாழ்க்கை மிகவும் அற்புதமாக இருந்தது. நான் என் வாழ்க்கையை மிகவும் ரசித்தேன். மரணத்திற்கு பிறகு ஏதோ ஒன்று இருக்கிறது என்று நான் நம்புகிறேன். அந்த மக்களை சந்திக்க நான் ஆவலோடு இருக்கிறேன்’ என்று மார்ட்டின் கூறினார்.
மேலும் தனது பிறந்த குழந்தையை கையில் ஏந்தியபடி தோன்றும் மார்ட்டின், தனது மகள் எமிலூவின் எதிர்காலத்திற்காக ஆதரவளிக்குமாறு பார்வையாளர்களை கேட்டுக்கொண்டார். “நீங்கள் ஒரு மெக்டோனால்ட்ஸ் சிக்கன் பர்கர் சாப்பிடுவதற்கு பதிலாக என் மகள் எமிலூவின் எதிர்கால நிதிக்கு உதவலாம்,” என்று நகைச்சுவையாக கூறினார்.
டானர் மார்ட்டின் தனது புற்றுநோய் பயணத்தை வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்ததன் மூலம் அவர் ஏராளமான பின்தொடர்பவர்களை பெற்றார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான்காம் நிலை பெருங்குடல் புற்றுநோயால் கண்டறியப்பட்ட பிறகு, மார்ட்டின் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தனது சிகிச்சையின் ஏற்றத் தாழ்வுகளையும், குணமடைவதையும், இறுதியில் தந்தையாவதையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த ஆண்டு மே 15 அன்று அவர்களுக்கு மகள் பிறந்தார். துரதிர்ஷ்டவசமாக, மகள் பிறந்த சிறிது காலத்திலேயே, அவரது உடல்நலம் வேகமாக மோசமடைந்தது. உடல் ரீதியான வேதனைகள் இருந்தபோதிலும், மார்ட்டினின் நேர்மை, நகைச்சுவை மற்றும் துணிச்சல் உலகம் முழுவதும் பலரின் மனதைத் தொட்டது. அவர் கடைசி வரை நம்பிக்கையுடனும், வேடிக்கையாகவும், பலருக்கும் ஊக்கமளிப்பவராகவும் இருந்தார்.
https://www.instagram.com/p/DLVauxHvgf7/
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
