பேரழிவில் மலர்ந்த மனித நேயம்.. வீடுகளை இழந்தவர்களுக்கு கடவுளாக வந்த பாபி செம்மனூர்

Published:

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இயற்கைப் பேரழிவில் இரண்டு ஊர்களே மண்ணில் புதையுண்டு அனைத்தும் அழிந்து போனது. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகளுக்காக நிவாரண உதவிகள் பல பக்கம் இருந்தும் குவிந்து வருகிறது. பிரபலங்களும், பொதுமக்களும் பணமாகவும், பொருளாகவும் உதவி செய்துவருகின்றனர்.

கர்நாடக அரசு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு 100 வீடுகள் கட்டித் தருவதாக உறுதி அளித்துள்ளது. தற்போது கேரளாவின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான பாபி செம்மனூர் என்ற தொழிலதிபர் வயநாடு நிலச்சரிவில் வீடுகளை இழந்தவர்களுக்கு அப்பகுதியில் தான் வைத்திருக்கும் நிலத்தில் வீடுகளை கட்டிக் கொடுக்க முன் வந்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவு.. என்னையும் கூட்டிட்டு போங்க.. ராணுவத்திற்கு 3 ஆம் வகுப்பு மாணவன் எழுதிய கடிதம்..

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் செம்மனூர் என்ற பெயரில் நகைக்கடை வைத்திருக்கும் பாபி செம்மனூர் டாக்டர் பட்டம் பெற்றவர். தனது அறக்கட்டளையின் மூலம் சமூகத் தொண்டு செய்து வருபவர். இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுமார் 812 கி.மீ. ஓடி கேரளாவில் மிகப் பிரபலமானவர். மேலும் வயநாடு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டமும் வைத்திருக்கிறார்.

இந்நிலையில் வயநாடு பேரழிவிலிருந்து இயல்பு நிலை கொண்டு வர பலரும் கைகோர்த்து உதவிகள் புரிந்து வரும் நிலையில் தற்போது வீடுகளை இழந்தவர்களுக்கு சுமார் 12 ஏக்கர் நிலப்பரப்பில் புதிதாக 100 வீடுகளைக் கட்டித் தர முன்வந்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்டவர்களின் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகிறது. இப்பணிகள் முடிந்தவுடன் வீடுகள் கட்டுமானப் பணிகள் நடைபெறும் என பாபி செம்மனூர் அறிவித்திருக்கிறார்.

மேலும் உங்களுக்காக...