மத்திய பிரதேச மாநிலத்தில் ChatGpt உதவியுடன் பிஎஸ்சி கணிதம் தேர்வு எழுதிய மாணவர் ஒருவர் பிடிபட்ட நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
ChatGpt என்ற ஏஐ டெக்னாலஜி தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இந்த டெக்னாலஜி மனிதர்களின் வேலையை பாதியாக குறைத்து வருகிறது என்பது தெரிந்தது. சினிமா துறை முதல் கல்வித்துறை வரை அனைத்து துறைகளிலும் தற்போது ChatGpt பயன்படுத்தப்படுகிறது என்பதும் இதில் கொடுக்கும் ரிசல்ட் மிகவும் துல்லியமாக இருப்பதால் மில்லியன் கணக்கானோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஒரு மாணவர் தனது மொபைல் போனில் ChatGpt மூலம் தேர்வு எழுதிக் கொண்டிருந்ததை தேர்வு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அவருடைய மொபைல் போனை பறிமுதல் செய்து பார்த்தபோது ChatGptயில் இருந்து பல பதில்கள் வரவழைக்கப்பட்டு அது அப்படியே எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிஎஸ்சி நான்காம் செமஸ்டர் எழுதிய அந்த மாணவன் தனக்கு கணிதம் சரியாக வராததால் இவ்வாறு செய்ததாக வருத்தம் தெரிவித்த நிலையில் அவரை தேர்வு அறையில் இருந்து வெளியேற்றிய தேர்வு அலுவலர், அவர் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரி நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த மாணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் இதுபோல் வேறு யாராவது ChatGpt உதவியுடன் தேர்வு எழுதுகிறார்களா? என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.