அமெரிக்காவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கிய பெங்களூரு இளைஞர் குடிக்க தண்ணீர் கேட்டதாகவும் அதற்கு ஹோட்டல் நிர்வாகம் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொள்ளுங்கள், 1260 ரூபாய் என்று சொன்னதை அடுத்து இது குறித்து அவர் ட்விட்டை பதிவு செய்தவுடன் ஹோட்டல் நிர்வாகம் அலறி அடித்து அவருக்கு இலவசமாக பல விஷயங்களை செய்ததாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் இஷான் சர்மா என்பவர் சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது அங்கிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி உள்ளார். விமானத்தில் பல மணி நேரம் பயணம் செய்த நிலையில் அவர் மிகவும் களைப்பாக ஹோட்டல் அறைக்கு வந்தபோது, ஹோட்டல் ஊழியர்கள் அவருடைய லக்கேஜை கூட எடுத்துக் கொண்டு வர உதவி செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டும் இன்றி மிகவும் களைப்பாக இருந்ததால் ஹோட்டல் ஊழியர்களிடம் தண்ணீர் கேட்டதாகவும், அதற்கு அந்த ஊழியர்கள் ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கிக் கொள்ளுங்கள், 1260 ரூபாய் தான் என்று பதில் அளித்ததாகவும் கூறியுள்ளார்.
தான் தங்கிய ஓட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு 16,00 ரூபாய் வாடகை என்ற நிலையில் தங்கும் நபர்களுக்கு தண்ணீர் கூட தர மாட்டேன் என்கிறார்கள் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார். ஏற்கனவே இவர் ஒரு பிரபல யூட்யூபர் என்பதால் அவரது எக்ஸ் தளத்தில் ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதால் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது.
பலர் அந்த ஓட்டல் நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் உங்கள் ஓட்டலில் தங்குபவர்களுக்கு தண்ணீர் கூட கொடுக்க மாட்டீர்களா என்று கண்டனங்கள் குவிந்தன. இதனை அடுத்து ஓட்டல் நிர்வாகம் சுதாரித்து உடனடியாக இஷான் சர்மாவுக்கு இலவசமாக தண்ணீர் தந்தது மட்டுமின்றி நீங்கள் இலவசமாக ஒரு நாள் தங்கிக் கொள்ளலாம் என்றும் சலுகையை அறிவித்தது. இந்த தகவலையும் அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
5 ஸ்டார் ஹோட்டல்களில் வேலை செய்யும் ஊழியர்கள் எந்தவித உதவியும் செய்யாமல் டிப்ஸ் மட்டும் எதிர்பார்க்கிறார்கள் என்றும் மற்றும் சில குறைகளையும் அவர் அந்த ஹோட்டல் நிர்வாகம் குறித்து கூறியது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.