வங்கி வேலையே வேண்டாம்.. தலைதெறிக்க ஓடும் இளைஞர்கள்.. என்ன ஆகும் வங்கியின் எதிர்காலம்..

  கடந்த மூன்று நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. எடுத்துக்காட்டாக, பேங்க் ஆஃப் இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 52,374 ஆக இருந்த…

bank account

 

கடந்த மூன்று நிதியாண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது.

எடுத்துக்காட்டாக, பேங்க் ஆஃப் இந்தியாவில் கடந்த நிதியாண்டில் 52,374 ஆக இருந்த ஊழியர் எண்ணிக்கை, இந்த நிதியாண்டில் 50,564 ஆக குறைந்திருக்கிறது. இதேபோல், கனரா வங்கியின் ஊழியர்கள், யூகோ வங்கியிலும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை கடந்த நிதியாண்டில் சரிவை கண்டாலும் இந்த நிதியாண்டில் ஓரளவு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆச்சரியப்படும் விதமாக, ஒருபுறம் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், மறுபுறம் வங்கி கிளைகளின் விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. SBI தனது கிளைகளை 22,405இல் இருந்து 22,937 ஆக உயர்த்தியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி 100க்கும் மேற்பட்ட புதிய கிளைகளை தொடங்கியுள்ளது. கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் யூகோ வங்கி ஆகியவையும் குறிப்பிடத்தக்க கிளை விரிவாக்கங்களை செய்துள்ளன.

பணியாளர்களின் இந்த தொடர்ச்சியான குறைவு, வங்கி தொழிற்சங்கங்களிடையே பெரும் கவலையை எழுப்பியுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள், இந்த ஊழியர் பற்றாக்குறை வாடிக்கையாளர் சேவையை பாதிப்பதோடு, இருக்கும் ஊழியர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமையையும் ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகின்றன. பல கிளைகள் இரண்டிலிருந்து மூன்று ஊழியர்களுடன் மட்டுமே செயல்படுவதாக கூறப்படுகிறது, இது அன்றாட பணிகளையும், ஊழியர்களின் மன உறுதியையும் கடுமையாக பாதிக்கிறது.

வங்கி ஊழியர்களுக்கு எதிரான வன்முறை மற்றும் அத்துமீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தான் வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை குறைய முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு டெக்னாலஜி அதிகரித்து வரும் நிலையில் வங்கி ஊழியர்களின் பணி எதிர்காலத்தில் பாதுகாப்பில்லை என்ற எண்ணமும் வங்கி ஊழியர்கள் மத்தியில் வங்கியில் பணிகள் சேர வேண்டும் என்ற இளைஞர்களை மத்தியிலும் ஒரு எண்ணம் தோன்றி உள்ளதாக கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி ஐடி துறையில் பணிபுரிந்தால் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சம்பளம் கிடைக்கும் என்றும் ஆனால் அதை ஒப்பிடும்போது வங்கி பணிகளில் குறைவான சம்பளம் என்று கூறப்படுகிறது.

மேலும் தற்போது படித்து முடித்த பல இளைஞர்கள் ஸ்டார்ட் அப் தொடங்குவதில் தான் முழு கவனம் செலுத்தி வருகின்றனர் என்பதும் ஒரு தனியார் நிறுவனத்தில் அல்லது அரசு அலுவலகத்தில் மிகவும் வேலை பார்ப்பதில் பெரும் அளவு ஆர்வம் காட்டுவதில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.

ஒரு காலத்தில் வங்கியில் பணியில் சேர வேண்டும் என்று இளைஞர்களின் கனவாக இருந்த நிலையில் தற்போது வங்கி வேலையே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு மாறி இருப்பது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே வங்கி பணிகளில் உள்ள ஊழியர்களின் பற்றாக்குறையை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்படுகிறது.