அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவில் விரிவடையும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்து சமீபத்தில் எழுப்பிய கேள்விகளை இந்திய அரசு சிறிதும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை முக்கிய உற்பத்தி மையமாக கொண்டு செயல்பட போவதாக உறுதியளித்துள்ளது.
“இந்தியாவில் ஆப்பிளின் முதலீட்டு திட்டங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை,” என்று ஆப்பிள் தெரிவித்துள்ளதாக இந்திய அரசின் வட்டாரங்கள் கூறுகின்றன. டிரம்பின் கருத்துக்களைப் பின்பற்றாமல், ஆப்பிள் இந்திய அரசுடன் தொடர்ந்து உறுதியான ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
மே 15-ஆம் தேதி, கத்தார் நாட்டின் டோஹாவில் நடைபெற்ற வணிக நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், ஆப்பிள் CEO டிம் குக்குடன் நேரடியாக பேசியதாகவும், “இந்தியாவில் உற்பத்தியை விரிவுபடுத்த வேண்டாம்” என்று அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
“நான் இந்தியாவில் உற்பத்தி விரிவாக்கத்தை விரும்பவில்லை; அவர்கள் தங்கள் தேவைகளை தானே பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று டிரம்ப் தெரிவித்தார். மேலும், ஆப்பிள் தனது உற்பத்தியை அமெரிக்காவில் அதிகரிக்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தினார்.
மேலும் இந்தியா அமெரிக்காவிற்கு இறக்குமதிக்கும் வரி விதிப்பை நீக்க ஒப்பந்தம் வழங்கியதையும் குறிப்பிட்டார். “இந்தியா எங்களிடம் வரி வசூலிக்காமல் ஒப்பந்தம் வழங்கத் தயாராக உள்ளது” என்றும் கூறினார்.
டிரம்பின் கருத்துக்களை குறித்து இந்திய தொழிலதிபர்கள் கூறியபோது, டிரம்பால் ஆப்பிள் இந்தியாவுக்கு வருவதை சிறிது தாமதங்களை ஏற்படுத்தலாம், ஆனால் இந்தியாவுக்கு கண்டிப்பாக ஆப்பிள் வரும் என்றும் கூறினர்.
மேலும் இந்தியா மின்னணு உற்பத்தியில் மிக வலுவான நிலை பெற்றுள்ளது. இதனால் டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டை விரைவில் மாற்றுவார்” என்றும் முன்னணி தொழிலதிபர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா தற்போது ஆப்பிளின் உலகளாவிய விநியோக சங்கிலியில் அடிப்படையான பகுதியாக மாறியுள்ளது. இந்தியாவின் உற்பத்தி ஊக்கத் திட்டத்தின் கீழ், ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் போன்ற ஒப்பந்த உற்பத்தியாளர்கள் தங்களுடைய செயல்பாடுகளை பெரிதாக விரிவுபடுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஐபோன் ஏற்றுமதி சாதனை அளவில் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.