சென்னை: சேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவு செய்தவருக்கு உடந்தையாக இருந்ததாக சேலம் சார் பதிவாளர் செந்தாமரை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஜெயசந்திரன் என்பவர் சேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து, தனது பெயருக்கு பத்திர பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு சேலம் சார் பதிவாளர் செந்தாமரை உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவர் மீது சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கும்படி சென்னை ஐகோர்ட்டில் சேலம் சார் பதிவாளர் செந்தாமரை மனு தாக்கல் செய்தார். செந்தாமரை தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலம் தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தது பற்றியோ, பத்திர பதிவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது பற்றியோ தனக்கு எதுவும் தெரியாது என்று சார் பதிவாளர் செந்தாமரை தரப்பில் வாதிடப்பட்டது.
அரசு தரப்பில், சேலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான சொத்துகளை பத்திரப்பதிவு செவ்தற்கு தடை இருப்பது பற்றி மனுதாரருக்கு நன்கு தெரியும். வேண்டுமென்றே தனது உறவினருக்கு இந்த சொத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதித்துள்ளதால் முன் ஜாமீன் வழங்க கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வேண்டும் என்றே பத்திர பதிவு செய்ய அனுமதி வழங்கி உள்ளதாகக் கூறி, சார் பதிவாளரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.