தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக ஒரு தற்காப்பு வளையத்திற்குள் சிக்கியிருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, தென்மாவட்டங்களில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான எழுச்சியும், மக்களின் தன்னெழுச்சியான வரவும் திமுகவின் பாரம்பரிய தேர்தல் வியூகங்களை கேள்விக்குறியாக்கியுள்ளன. “பாஜக எதிர்ப்பு” மற்றும் “டெல்லி எதிர்ப்பு” என்ற ஒற்றை ஆயுதத்தை மட்டுமே நம்பி எத்தனை தேர்தல்களை சந்திக்க முடியும் என்ற சோர்வு இப்போது உடன்பிறப்புகள் மத்தியிலேயே எழத் தொடங்கியுள்ளது.
தற்போதைய அரசியல் சூழலில், திமுகவிற்கு எதிரான அதிருப்தி அலை அடிமட்டத்தில் நிலவுவதை எவராலும் மறுக்க முடியாது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு குறித்த கவலைகள் மற்றும் நிர்வாக ரீதியான விமர்சனங்களை முன்வைத்து எதிர்க்கட்சிகள் களம் காண்கின்றன. இந்த சூழலில், அதிமுகவை மட்டும் விமர்சனம் செய்தால் அது எடுபடாது என்பது திமுகவிற்கு தெரியும். அதே சமயம், விஜய்யை நேரடியாக தாக்கினால், அது அவரை இன்னும் பெரிய அரசியல் சக்தியாக மாற்றிவிடும் என்ற அச்சமும் அவர்களுக்கு உண்டு. இதனால் தான், வழக்கம் போல பாஜகவையும், மத்திய அரசையும் குறிவைத்து “மாநில உரிமை” என்ற பழைய பாடத்தையே திமுக மீண்டும் பாட தொடங்கியுள்ளது.
பாஜக வெறும் 27 தொகுதியில் தான் போட்டியிடுகிறது. அதிலும் எத்தனை தொகுதியில் ஜெயிக்கும் என்பது கேள்விக்குறி.. ஆட்டத்திலேயே இல்லாத பாஜகவை திமுக விமர்சனம் செய்வதால் என்ன பயன்? களத்தில் உள்ள பிளேயரை எதிர்கொள்ளாமல் substitute பிளேயரை எதிர்கொண்டு என்ன பயன்?
எனவே இந்த டெல்லி எதிர்ப்பு Strategy இப்போது எந்த அளவிற்கு வேலை செய்யும் என்பது சந்தேகமே. ஒரு காலத்தில் இந்த முழக்கம் மக்களிடம் உணர்ச்சிப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மைதான். ஆனால், இன்று மக்கள் அன்றாட வாழ்க்கை சிக்கல்களுக்கும், வேலைவாய்ப்பு மற்றும் ஊழலற்ற நிர்வாகத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் “டெல்லி எதிர்ப்பு” என்பதை தாண்டி, “தமிழகத்தில் என்ன மாற்றம்?” என்ற கேள்வி ஓங்கி ஒலிக்கிறது. விஜய்யின் ரோடு ஷோக்களில் திரண்ட அந்தப் பிரம்மாண்டக் கூட்டம், இந்த மாற்றத்திற்கான தேடலையே பிரதிபலிக்கிறது.
திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மத்தியிலும் ஒருவித சோர்வு காணப்படுகிறது. ஒவ்வொரு முறையும் “பாசிசம் வீழும்”, “ஜனநாயகம் வெல்லும்” என்று டெல்லியை காட்டியே வாக்கு கேட்க வேண்டிய கட்டாயம், உள்ளூர் மட்டத்திலான குறைகளை மறைக்க பயன்படுமா என்ற சந்தேகம் அவர்களுக்குள் எழுந்துள்ளது. விஜய்யின் அரசியல் வருகை, திமுகவின் வாக்கு வங்கியில் பெரும் ஓட்டையை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தும், அவரை நேரடியாக எதிர்க்க முடியாமல் பாஜகவை நோக்கி மடையை திருப்புவது ஒரு பலவீனமான தற்காப்பு முறையாகவே பார்க்கப்படுகிறது.
முடிவாக, தமிழக அரசியல் இப்போது ஒரு மும்முனை போட்டியை தாண்டி, “மாற்றம் வேண்டுமா அல்லது தொடர்ச்சியா?” என்ற நிலைக்கு வந்துள்ளது. ஒரே வியூகத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது வாக்காளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தக்கூடும். ஏப்ரல் 23-ல் நடைபெறப்போகும் தேர்தல், திமுகவின் இந்த “டெல்லி எதிர்ப்பு” முழக்கம் இன்னும் செல்லுபடியாகுமா அல்லது விஜய்யின் “ஊழலற்ற நிர்வாகம்” என்ற புதிய முழக்கம் வெல்லுமா என்பதை தீர்மானிக்கும். எது எப்படியோ, திமுக தனது தேர்தல் உத்திகளை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மட்டும் நிதர்சனம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
